யுத்தம் நிறைவடைந்தும் சுபீட்சமான வாழ்வுக்கேங்கும் எமது மக்களுக்கு நத்தார் புதிய ஒளியை தரவேண்டும்: சிறிரெலோ தலைவர் உதயராசா
யுத்தம் நிறைவடைந்து இரண்டாண்டுகள் கடந்த பின்பும் இருண்ட யுகத்தில் வாழ்ந்துவரும் எமது மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளிலிருந்தாவது சுபீட்சமான வாழ்க்கை கிடைக்க இயேசு கிறிஸ்துவை பிரார்த்திப்போம்.
யுத்தம் நிறைவடைந்தும் சுபீட்சமான வாழ்வுக்கேங்கும் எமது மக்களுக்கு நத்தார் புதிய ஒளியை தரவேண்டும் என சிறிரெலோ தலைவர் ப. உதயராசா தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
எமது மண்ணில் கடந்த மூன்று தகாப்தகாலமாக கொடூரயுத்தம் இடம்பெற்ற போது எமது மக்கள் எவ்வாறான பேரினவாத அடக்கு முறைக்குள் வாழ்ந்தனரோ அதே போல தான் இன்று யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் வாழ்ந்து வருகின்றனர். இந்த துர்ப்பாக்கிய நிலை இன்றைய இயேசு பிறானின் பிறந்த நாளிலிருந்தாவது மாறி, எம் மக்களிற்கு நல்வாழ்க்கை உருவாக இன,மத வேறுபாடு இன்றி அனைவரும் இதயசுத்தியுடன் செயற்படவும், புதிய சிந்தனைகள் உருவாகவும் இந்த தருணத்தில் இயேசு பிரான் கிருபை கொடுக்கவேண்டும்.
கடந்த காலங்களில் அரசினால் தவறான பிற்போக்குதனமான கொள்கைகள் முன்னேடுக்கப்பட்டதினால் எமது மண்ணில் இரத்த ஆறு ஓடியதனையும் உடமைகள் இழக்கப்பட்டதனையும் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.ஆனால் இன்று அந்த நிலமை ஓய்ந்திருக்கிறது. எனினும் இன்றைய காலகட்டத்தில் எமது மக்கள் மீது அரசினால் திணிக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் எம்மவர்களினை பழைய கசப்பான நிலைக்கு கொண்டுசெல்ல வழிவகுக்கின்றது.
எனவே இயேசு பாலன் அவதரிக்கும் இன்றைய நாளிலிருந்தாவது எமது மக்கள் தமது மண்ணலில் தலைநிமிர்ந்து சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கவும், சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாழும் எம் உறவுகள் தங்கள் குடும்பங்களுடன் ஒன்றுசேர்ந்து புதிய வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் இணையவும், தமிழ் மக்களிற்குரிய அரசியல் தீர்வினை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இன்றைய தினத்தில் அனைவரும் இயேசு கிறிஸ்துவை பிரார்த்திப்போம். நத்தார் பரிசாக நிம்மதியான வாழ்வும் நிறைவான அரசியல் தீர்வும் கிடைக்கவேண்டும் என்பதே எமது அவாவாகவும் வேண்டுதலாகவும் இருக்கின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply