பிரச்சினைக்கு தீர்வு காணாமல் கால இழுத்தடிப்பு வேதனையானது

யுத்தம் நிறைவடைந்து விட்டதென்று கூறிக் கொண்டு நாட்டின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டு செல்வது மிகுந்த வேதனையைத் தருகின்றது. இவ்வாறு திருமலை, மட்டக்களப்பு மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வுலகில் மீட்பராக வந்துதித்த இறைவனின் மகன் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றுப் பிறப்பினை மீண்டுமொரு கிறிஸ்மஸ் நாளில் இன்று கொண்டாடுகின்றோம்.

இந்த மகிழ்ச்சியான நாளை உலக மாந்தர் அனைவரும் இன, மத, மொழி எல்லைகளைக் கடந்து ஒன்றாகக் கொண்டாடுவது நமக்கு மகிழ்ச்சியை தருகின்றது.

இவ்வாறான சமய விழாக்கள் எல்லா மதத்தவராலும் கொண்டாடப்படுவதன் வாயிலாக நாம் சமய சமூக நல்லிணக்கத்தை மிகுந்த ஆழமாக கட்டியெழுப்ப வாய்ப்புக் கிட்டுகின்றது.

திருமலை, மட்டக்களப்பு மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மெசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் முன்னறிவிப்பு எனும் பகுதியில் காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொலியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது என்று விவிலியம் கூறுகின்றது.

எனவே இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவானது,

அடிமை விலங்கை உடைக்க வந்த விழா.

சாவின் தலைகளை அறுக்க வந்த விழா,

அடக்குமுறைகளை அடக்க வந்த விழா,

பேரினவாதத்தை போக்க வந்த விழா,

சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய வந்த விழா,

உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரன், பெரும்பான்மையினர், சிறுபான்மையினர், ஆள்பவர், ஆளப்படுபவர் என்கிற சமூக வேறுபாடுகளை வேரறுக்க வந்த விழா.

ஏனெனில் அவரது பிறப்பில் கூறப்பட்ட வாழ்த்தொலி விண்ணகத்தில் மகிழ்ச்சியும் மண்ணகத்தில் மனிதருக்கு சமாதானம் உண்டாவதாக என்று விவிலியம் கூறுகின்றது.

இப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் யுத்தம் நிறைவடைந்து விட்டதென்று கூறிக் கொண்டு நாட்டின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டு செல்வது மிகுந்த வேதனையைத் தருகின்றது.

மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத சூழ்நிலை இன்னும் தொடர்கின்றது.

வடக்கு கிழக்கு பகுதிகளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் அச்ச உணர்வு நீடிக்கின்றது.

மக்கள் உண்மையான நீதியுடன் கூடிய சமாதானத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

விஷேடமாக யுத்தம் நிறைவுற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்ட அப்பாவி பொது மக்கள் இன்னமும் சிறைவாசம் அனுபவித்து வாடுவது பலத்த கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

இவர்களது விடுதலை விரைவாக்கப்பட வேண்டும் என்பது எமது கிறிஸ்மஸ் விழாக் கோரிக்கையாகும்.

அத்துடன் சாதாரண மக்களின் வாழ்க்கைச் சுமை குறைக்கப்பட வேண்டும். இவ்வாறான நன்மையான காரியங்கள் நடக்கும் போதுதான் உண்மையான விழாவைக் கொண்டாட வாய்ப்பு ஏற்படும்.

கிறிஸ்து பிறப்பு விழா அடிமை விலங்கை உடைக்க வந்த விழா. அத்தகைய விழா எமது வாழ்வின் அடிமை விலங்குகளை உடைத்து வாழ்வில் வசந்தம் காண மீண்டும் நத்தார் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply