இந்தியாவின் கருத்தை செவிமடுத்து இலங்கை அரசு செயற்படவேண்டும்

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தினை செவிமடுத்து, ஆக்கபூர்வமான வகையில் செயற்பட இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும்.

நாட்டில் நிரந்தர கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு எமது பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக உள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தானது ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய சகல தேவைகள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாக சுட்டிக்காட்டி நிற்கின்றது. இந்தியாவின் இத்தகைய நிலைப்பாடானது வரவேற்கத்தக்கதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப் பட்ட நல்லிணக்க ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அறிக்கையொன்றினை நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார்.

இதில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான சுயாதீன விசாரணை அவசியம் என்றும் அரசியல் தீர்வு மூலமே சமரசமாக முன்னோக்கி நகர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சம்பந்தன் எம்.பி. மேலும் கூறியதாவது: நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தானது வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவின் சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார செயலாளர் இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். இக்கருத்தினை நாம் மனப்பூர்வமாக வர வேற்கின்றோம். இலங்கையில் இடம் பெற்ற மனித உமை மீறல்கள் தொடர்பாக ஒரு சுதந்திரத்தன்மையான வெளிப்படை தன்மை கொண்ட ஒரு பாரபட்மற்ற விசாரணை நடைபெறவேண்டுமென்று இந்தியா முதலாவதாக கூறியுள்ளது. இந்தக் கருத்தினை நாம் வரவேற்கின்றோம்.

இரண்டாவதாக அர்த்தபுஷ்டியான அரசியல் அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்றும் யுத்தம் முடிவு பெற்றுள்ள சுழலில் இதுவே அத்தியாவசியமான தேவையாகும். அவ்விதமான அர்த்தபுஷ்டியான அரசியல் அதிகார பகிர்வு ஏற்படும் சுழலில் தான் விசுவாமான, உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிபிறக்கும் என்று இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. இதனையும் நாம் மனப்பூர்வமாக வரவேற்கின்றோம்.

மூன்றாவது விடயமாக இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம், புனர்னாழ்வு நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் மீளவும் தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான சகல முயற்சிகளும் இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிக்கமைய மேற்கொள்ளப்பட்டு அவர்களின் வாழ்வு நிலை கஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. இதனையும் நாம் மனப்பூர்வமாக வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுடைய சகல தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் இந்தியா தனது அறிக்கையில் உள்ளடக்கியிருப்பதனை நாம் அவதானிக்கின்றோம். நீண்டகாலமாக எமது பிரச்சினையில் சம்பந்தப் பட்ட வலுவான அயல்நாடாக இந்தியா திகழ்கின்றது. எமது பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் பங்களிப்பு தொடரும் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் பங்களிப்பு தொடரவேண்டும் என நாம் வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியாவின் கருத்தினை செவிமடுத்து ஆக்க பூர்வமான முறையில் இலங்கை அரசாங்கம் செயற்படுவதற்கு முன்வரவேண்டும் என இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். நாட்டில் நிரந்தர, கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு எமது பரிபூரணமான ஒத்துழைப்பினை வழங்க நாம் தயாராக உள்ளோம். இது எமது கடமையாகும் என்பதையும் தற்போதைய சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நிதானமாக செயற்பட்டு அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு தீர்வொன்றினை காண வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்@றாம்.இதற்கிணங்கவே எமது செயற்பாடுகள் அமையும் என்பதை சகல தரப்பினருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply