150,000 மலையக மக்கள் இலங்கை பிரஜாவுரிமை பெறுவர்
இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்க (திருத்தச்) சட்டமூலமும், நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலமும் நேற்று வியாழக்கிழமை சபையில் திருத்தங்களின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க இவ்விரு சட்டமூலங்களையும் சபைக்கு சமர்ப்பித்தார். இதில் 150,000 இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் திருத்தச் சட்டமூலம் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் நடைபெற்ற நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் சிறப்பேற்பாடுகள் திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தின் இறுதியில் பதிலளித்து பேசிய பிரதமர் தெரிவிக்கையில்;
” சிரிமாசாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் எந்த ஒரு நாட்டுக்கும் உரித்தில்லாத ஒரு பகுதியினர் இருந்தனர். இவர்களுக்கு எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாமல் இருந்தது. இம் மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் முகமாகவே சட்டமொன்று அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவே தற்போதைய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
எவராயிருந்தாலும் அவரவர்க்கென உரித்தான நாடொன்று இருக்கவேண்டும். அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் இலங்கையில் பிரஜாவுரிமை வழங்க செயற்படுவோம்.
இதன்போது, சிக்கல்கள் ஏற்படலாம். இவ்வாறான சிக்கல்களை பேச்சுகள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். நாம் அனைவரும் இவ் விடயத்தில் ஒருமித்து நேர்மையாக செயற்படுவோமாயின், முகம் கொடுக்கவேண்டியிருக்கும் சிக்கல்களை எதிர்கொள்வதில் கஷ்டம் இருக்காது’ என்றார்
இந்த விவாதத்தில் குழுக்களின் பிரதித் தலைவரான ஜே.வி.பி. எம்.பி. இராமலிங்கம் சந்திரசேகரனும் உரையாற்றியதுடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் விவாதத்தின் போது சபையிலேயே இருக்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply