இலங்கையின் பொருளாதாரத்தை 9 வீதமாக அதிகரிக்க இலக்கு
2014 ஆம் ஆண்டில் இலங்கை யின் பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாக அதிகரிப்பது என்ற இலக்குடன் 2012 ஆம் ஆண்டுக்கான நிதித் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப் பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். இந்த இலக்கை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒத்துழைப்புக்கள் பெற்றுக் கொள்ளப்படவிருப்ப தாகவும் அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மத்திய வங்கிக்குக் காணப்படும் தொடர்புகள் தொடர்ந்தும் பேணப்பட்டு அதன் ஒத்துழைப்புக்கள் நீடிக்கப்படும் என்று, சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிவரும் கடன் திட்டத்தின் அடுத்தகட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை ஜனவரி 21 ஆம் திகதி நடைபெறுமென்றும் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு மற்றும் அடுத்த ஐந்தாண்டுக்கான நாணய மற்றும் நிதித்துறை கொள்கைகளுக்கான செயற்திட்டத்தை மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிவாப் கப்ரால் நேற்று வெளியிட்டார்.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் அதிகாரிகள், இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளின் தலைவர்கள், முகாமையாளர்கள், நிதி நிறுவன தலைவர்கள் நிதித்துறை நிபுணர்கள் முன்னிலையில் மத்திய வங்கி கேட்போர் கூட்டத்தில் அஜித் கப்ரால் செயற் திட்டத்தை வெளியிட்டு வைத்தார்.
இலங்கையில் விவசாயத்துறை, கடற்றொழில்துறை, நிர்மாணத்துறை, சுற்றுலாத்துறை ஊடாக அதிகளவு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் இலக்குடன் செயற்படுவதாக குறிப்பிட்ட ஆளுநர் 2011 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இலக்கை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2011 ஆம் ஆண்டு 8.5 வீதமாக உள்நாட்டு உற்பத்தி திட்ட மிடப்பட்டபோதும் 8.3 ஆக தக்கவைத்துக்கொள்ள முடிந்தது.
பணவீக்கத்தை 4 முதல் 6 வீதம் வரை குறைப்பது என இலக்காக கொண்டபோதும் 4.9 வீதமாக குறைக்க முடிந்தது.
சுற்றுலாத்துறையில் 2011 ஆம் ஆண்டு 825 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளபோதும் 2016 ஆம் ஆண்டு 2,500 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுவது என்ற இலக்கில் செயற்படவுள்ளது. 2011 இல் 8,50,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர். 2016 இல் 25 லட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவது என திட்டமிடப்பட்டுள்ளது.
தேயிலை ஏற்றுமதி மூலம் 2015 ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெறுவது என்றும் ரப்பர் ஏற்றுமதி மூலம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை 2015 இல் பெறுவது என்றும் பழங்கள் மற்றும் காய்கறி வகைகள் ஏற்றுமதி மூலமாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை 2015 இல் பெறுவது என்றும் இதேபோன்று கடற்றொழில் துறையிலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெறுவது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியில் இலங்கை 2016 இல் தன்னிறைவு அடையும் இலக்கையும் எட்டுவது என திட்டமிடப்பட்டுள்ளது. நிர்மாணத்துறையில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுற்றுலா ஹோட்டல்கள், வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.
மஹிந்த சிந்தனை கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக 2006 முதல் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டில் அமைதி ஏற்பட்டு அதற்கு சாதகமான சூழலும் ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டு வரை குறிக்கப்பட்ட பொருளாதார இலக்குகளை எட்டியுள்ளோம்.
அதன் பின்னர் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் அடிப்படையில் விவசாய, நிர்மாண, கடற்றொழில், சுற்றுலா மற்றும் சேவைகள் துறையில் பாரிய இலக்கை எட்ட முடியும். என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிஷாட் கப்ரால் தெரிவித்தார்.
நாம் திட்டமிட்டுள்ள இலக்கை அடைவது என்பது எளிதானதல்ல. இதனை எட்டுவதற்கு எமது திட்டங்களும் கொள்கைகளும் முழுமூச்சாக செயற்படுத்தப்படல் வேண்டும். அத்துடன் மஹிந்த சிந்தனை ஊடாக நாம் நிர்ணயித்துள்ள இலக்கை அடைவதற்குரிய உண்மை நிலையை மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் இது தொடர்பாக தெளிவு பெற்றாலேயே இலக்கை அடைவது எமக்கு எளிதானதாக இருக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply