பகைமையுணர்வை தோற்றுவிக்கும் விமல், சம்பிக்க கருத்துக்கள்
ஆளும் கட்சியில் பிரதான அமைச்சர் பதவி வகிக்கும் விமல் வீரவன்ஸவும் சம்பிக்க ரணவக்கவும் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் இனங்களுக்கிடையில் மீண்டுமொரு பகைமையுணர்வை தோற்றுவிப்பதாகவே அமைந்துள்ளது.
இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவ்வாறில்லாவிடின் இது நாட்டின் எதிர்கால சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு துணைபோவதாக அமையுமென ரெலோ அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘அமைச்சர்களான விமல் வீரவன்ஸவும் சம்பிக்க ரணவக்கவும் இனவாதக்கருத்துக்களை ஆரம்பகாலம் தொட்டு வெளியிட்டு வருவதுடன், அதனூடாகவே தமது அரசியலையும் நிலைநிறுத்தியுள்ளனர். இவர்கள் தென்னிலங்கையிலுள்ள பெரும்பான்மையின மக்களை இனவாதக்கருத்துக்களூடாக திசைதிருப்பும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளுங்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, டி.யூ.குணசேகர உட்பட பலர் இவர்களின் இனவாதக்கருத்துக்களை பகிரங்கமாக எதிர்த்துள்ளதுடன் எதிர்காலத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களென வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு அமைச்சர்களும் சிறுபான்மையின மக்களை மட்டுமல்லாது அரசாங்கத்தையும் கூட தற்போது வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் வெளிவராத உண்மைகளும் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன.
1983 ஜூலைக் கலவரத்திற்கு ஒப்பான மிகப்பெரும் கசப்பான வார்த்தைகளை கொட்டிக்கொண்டிருக்கும் இவர்கள் தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காதது எந்த உள்நோக்கத்தை கொண்டதென்பது தொடர்பில் சிறுபான்மையின மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
மிகப்பெரும் கொடூர யுத்தத்தை எதிர்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களை இழந்துபோன எமது மக்கள், விமல் வீரவன்ஸ மற்றும் சம்பிக்க ரணவக்க மட்டுமல்ல எந்தவொரு இனவாதியினதும் கடும்போக்கையும் ஒரு கருதுகோளாக எப்போதும் கண்டுகொள்ளப்போவதில்லையென்ற உண்மையை வரலாறு தெளிவுபடுத்தும்.
எமது மக்களின் இன்றைய ஜனநாயக ரீதியிலான அரசியல் உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டம் நிச்சயம் வெகு விரைவில் வென்றெடுக்கப்படுமென்பதை இனவாதிகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply