ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழாவில் தமிழ் கூட்டமைப்பு
ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் நூற்றாண்டு விழாவை தென்னாப்பிரிக்கா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது. ப்ளூம்பொன்டீன் நகரில் நடந்த நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான தென்னாப்பிரிக்கர்கள் கூடியிருந்தார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டனர். புலம்பெயர் தமிழர்கள் அங்கம் வகிக்கும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, உலகத் தமிழர் பேரவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் நூற்றாண்டு விழாவில் இலங்கை அரசாங்கம் கலந்துகொள்ளப் போவதில்லையென்று அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கும் இயக்கமாக அங்கீகரித்து தமக்கு தென்னாபிரிக்கா இந்த அழைப்பை விடுத்திருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழோசையிடம் கூறினார்.
தென்னாப்பிரிக்க விடுதலைத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை காரணமாக அவரால் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.
நிறவெறியின் முடிவில் கட்சியை ஆட்சி அதிகாரத்தை நோக்கி கொண்டு வழிநடத்திய, 93வயதான நெல்சன் மண்டேலா அண்மைக்காலமாக பொது நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை.
உலக நாடுகள் மற்றும் ஆபிரிக்கத் தலைவர்கள், பேராயர் டெஸ்மன்ட் டூட்டு மற்றும் ஆபிரிக்க- அமெரிக்க சிவில் உரிமைகள் ஆர்வலர் ஜெசி ஜாக்சன் போன்றோரும் புளூம்பொன்டீனில் கூடியிருந்தனர். ப்ளூம்பொன்டீன் நகர திருச்சபைக்கு முன்பாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா ஏற்றிவைத்த நூற்றாண்டு விடுதலைத் தீபம் அருகே உள்ள சுதந்திர அரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் பேசிய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, ஆப்பிரிக்காவினதும் உலகினதும் ஒத்துழைப்புடன் நிறவெறியையும் காலனித்துவத்துவத்தையும் வெற்றிகொண்ட தென்னாபிரிக்க மக்களுக்கு இதுவொரு பொன்னான நாள் என்று கூறினார்.
இந்த 2012ம் ஆண்டு முழுவதும் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் நூற்றாண்டு விழா தென்னாபிரிக்காவில் களைகட்டவுள்ளது.
இதேவேளை, இந்த நூற்றாண்டு விழாவில் இலங்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply