வடபகுதி மக்கள் தமது உரிமைக்காக போராடினார்களே தவிர நாட்டைப் பிரிப்பதற்கு யுத்தத்தில் ஈடுபடவில்லை: எஸ்.பி.திசநாயக்க

வடபகுதி மக்கள் தமது உரிமைக்காகப் போராடினார்களே தவிர, நாட்டைப் பிரிப்பதற்காக போரில் ஈடுபடவில்லை என்று இலங்கை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2009-2010 பொது பட்டமளிப்பு விழா கடந்த இரு நாடகளாக வந்தாறுமூலை வளாக மண்டபத்தில் நடைபெற்றது.

வேந்தர் பேராசிரியை யோகா இராசநாயகம் முன்னிலையில் நடைபெற்ற நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பல்கலைக் கழகத்தில் மாணவர்களாக நீங்கள் அனுமதி பெற்ற போது இந்த பிரதேசத்தில் யுத்த சூழ்நிலை காணப்பட்டது.

தற்போது பட்டம் பெற்று வெளியேறும் போது அமைதியும் சமாதானமும் நிறைந்த – மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் பட்டதாரிகளாக வெளியேறுகிறீர்கள்.

அண்மையில் அமெரிக்காவிலுள்ள 11 பல்கலைக்கழகங்களுக்கு பயணம் செய்தபோது அங்கு நமது நாட்டைச் சேர்ந்த 11 தமிழர்களும் 2 சிங்களவர்களும், மலேசியாவிலுள்ள 7 பல்கலைக் கழகங்களுக்கு சென்றபோது எமது நாட்டைச் சேர்ந்த பலரும் பேராசிரியர்களாகப் பணியாற்றுவதை காண முடிந்தது.

மலேசியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் 99 சதவீதமானோர்கள் தமிழ் கல்விமான்கள் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் நினைவுபடுத்துகிறேன்.

1970 ஆண்டு காலப்பகுதியில் உங்களைப் போல மாணவனாக, சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட போது, வர்த்தகத் துறையில் 70 மாணவர்கள் இருந்தனர். அவர்களில் 23 பேர் தமிழ் மாணவர்கள்.

அவர்கள் தமிழைப் போல் ஆங்கிலமும் சரளமாகப் பேசக் கூடியவர்களாக இருந்தனர். இந்த 23 பேரில் 4 பேர் இப்போது பேராசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். இன்னும் 15 பேர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர் பதவிகளில் உள்ளனர்.

1965 ஆண்டு வரை மலேசியாவிலுள்ள அஞ்சல் நிலையங்களிலும் தொடருந்து நிலையங்களிலும் அதிபர்களாக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்ர்களே பணியாற்றினார்கள்.

இப்படி வடக்கு கிழக்கு தமிழர்கள் கல்வித்துறையில் முன்னேற்றமடைந்தவர்களாகவும் உயர்ந்த இடத்திலும் இருந்துள்ளார்கள்.

இன்று எமது நாட்டில் யுத்தம் ஓய்ந்து அமைதியான சூழ்நிலை காணப்படுகிறது. நாட்டில் அன்றைய யுத்தநிலைக்கு காரணம் சிலர் அல்ல. அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்கட்சிகளின் தலைவர்கள் உட்பட இந்த தவறை விட்டவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர்.

இந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் மற்றம் இழப்புகளுக்கு எல்லாம் இவர்கள் தான் பொறுப்புக் கூறவேண்டியவர்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் முன்மாதிரியை நினைவுபடுத்த விரும்புகிறேன். பழைய சம்பவங்களை மறந்துவிட வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தென்னாபிரிக்காவை கட்டியெழுப்புவோம் என தென்னாபிரிக்கா விடுதலை பெற்றபோது வெள்ளை இனத்தவருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

நெல்சன் மண்டேலா ஜனாதிபதி பதவிக்கு வரும்வரை தென்னாபிரிக்காவில் கறுப்பு இன மக்கள் வாக்குரிமை அற்றவர்களாகவே வாழ்ந்தார்கள். 20 சதவீதமாக அங்கு வாழ்ந்த வெள்ளை இனத்தவர்கள் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தார்கள்.

கறுப்பு இனத்தவர்கள் வாக்குரிமை பெற்று நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட வேளை வெள்ளையர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தயாரான போது நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தென்னாபிரிக்காவை கட்டியெழுப்புவோம் என அழைப்பு விடுத்து அவர்களின் முடிவை மாற்றியமைத்தார்.

எமது நாட்டைப் பொறுத்தவரை இப்போது சிறுபான்மை, பெரும்பான்மை என யாரும் இல்லை. நாம் எல்லோரும் ஒன்றுதான் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்களிடையே பிரிவு வேண்டாம்.

அன்று வடக்கு மக்கள் தமது உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை தவறில்லை. 1948 சுதந்திரத்திற்கு பின்னர் வடக்கில் அபிவிருத்தி நடைபெறவில்லை. அதன் காரணமாகவே வடக்கு இளைஞர்கள் யுத்தத்திற்கு தள்ளப்பட்டார்கள். வடக்கு மக்கள் நாட்டைப் பிரிப்பதற்காக யுத்தத்தில் ஈடுபடவில்லை.

மேற்குலக நாடுகள் இலங்கையைப் பிரிக்க வேண்டும் என முயற்சிக்கிறார்கள். அப்படி பிரிக்க வேண்டும் என்பதில் சந்தோசம் காண்கிறார்கள். அவர்களுடைய முக்கிய நோக்கம், இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்பதே.

அதற்காகவே இலங்கையைப் பிரிக்க முற்படுகிறார்கள். எமது நாட்டை ஒரு போதும் பிரிக்க முடியாது அதற்கு இந்தியாவும் துணை போகாது.

கடந்த 30 வருட யுத்த சூழ்நிலை காரணமாக தமிழ் கல்விமான்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். வடக்கில் கல்விமான்கள் மற்றும் அறிஞர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி காணப்பட்டது. இந்தநிலை மாறி மீண்டும் பழைய நிலை உருவாக வேண்டும் இதற்கு ஏற்ப பல்கலைக்கழக கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்.

தாய்மொழியில் கல்வி பயின்று மேற்குலக நாடுகளில் உயர்கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு பெறுவது சாத்தியமில்லை. இந்நிலையில் ஆங்கில மொழியிலும் கல்வி கற்பதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும்.

இந்த ஆங்கில மொழி என்பது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெறுமதி வாய்ந்த மொழியாகும். இந்த நாட்டில் இனரீதியாக, மத ரீதியாக, மொழிரீதியாக எந்தப் பல்கலைக்கழகமும் இயங்க முடியாது. “என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply