“நானோ’ தொழில்நுட்பம் மூலம் சூரிய ஒளி சக்தியைச் சேமிக்க யோசனை
“நானோ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விண்வெளியிலிருந்து பூமிக்கு சூரிய ஒளிசக்தியைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளிடம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.
சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் லேசர் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய கருத்தரங்கை திங்கள்கிழமை தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியது:
மனிதர்கள் பயன்படுத்துவதைவிட ஒரு லட்சம் கோடி அதிகமான சக்தியை சூரியன் வெளியேற்றுகிறது. அதில் ஒரு சிறு பகுதியையாவது சேமிக்க முடிந்தால், எதிர்காலத்தில் நமது எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.
விண்வெளியில் சூரிய ஒளி சக்தியைச் சேமிப்பது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. பூமியில் சூரிய ஒளி சக்தியைச் சேமிப்பதற்கும், விண்வெளியில் சேமிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
விண்வெளியில் 24 மணி நேரமும் சூரிய ஒளி சக்தியைச் சேகரிக்கலாம். பூமியில் அதிகபட்சம் 8 மணி நேரம் வரை மட்டுமே சேகரிக்க முடியும். அதேபோன்று, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் விண்வெளி சூரிய ஒளி சக்தி நிலையங்கள் பாதிக்கப்படாது.
விண்வெளியில் சூரிய ஒளி சக்தியைச் சேகரிக்க மூன்று அமைப்புகள் மிக முக்கியமானவை. சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம், பூமியில் அந்த சக்தியைப் பெறுவதற்கான நிலையம், விண்வெளியிலிருந்து பூமிக்கு சூரிய ஒளி சக்தியைக் கொண்டுவருவதற்கான தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் முக்கியம்.
விஞ்ஞானிகளுக்கு சவால்கள்: விண்வெளியிலிருந்து சூரிய ஒளி சக்தியைப் பெறுவது தொடர்பான சில சவாலான யோசனைகளை உங்கள் முன்வைக்கிறேன். விண்வெளியிலிருந்து மரபுசாரா எரிசக்தியைப் பெறுவது சாத்தியமே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், விண்வெளியில் சேகரிக்கப்படும் எரிசக்தியை எவ்வாறு பூமிக்குக் கொண்டுவருவது என்பதற்கான வழிமுறைகள் இன்னும் கண்டறியப்படவில்லை.
நுண் அலைகள் மூலமாகவோ, லேசர் அலைக்கற்றை மூலமாகவோ சூரிய சக்தியை பூமிக்கு அனுப்ப முடியுமா என்று ஆராயலாம். “நானோ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பேட்டரிகளைக் கொண்டு விண்வெளியிலிருந்து எரிசக்தியை பூமிக்குக் கொண்டுவரலாம்.
இந்த “நானோ’ பேட்டரிகளில் ரசாயான அல்லது எலெக்ட்ரிக் எதிர்வினைகளின் மூலம் சக்தியைப் பூமிக்குக் கொண்டுவர முடியுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யலாம். “நானோ’ தொழில்நுட்பத்தின் மூலமாகவோ, லேசர் தொழில்நுட்பத்தின் மூலமாகவோ சூரிய சக்தியை பூமிக்குக் கொண்டுவருவது குறித்து இங்குள்ள விஞ்ஞானிகள் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
லேசர் தொழில்நுட்பம்: லேசர் ஒளிக்கற்றையைக் கண்டுபிடித்தபோது, உற்பத்தித் துறையிலிருந்து மருத்துவத் துறை வரை அனைத்துத் துறைகளிலும் இந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என யாரும் நினைக்கவில்லை. வரும் 2020-க்குள் சிறிய மூலக்கூறுகளைக் கண்டறியும் வகையில் மிக நுண்ணிய லேசர் ஒளிக்கற்றைகள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் வடிவமைப்பிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளரான மணிலால் பூமிக், கார்பன் மோனாக்சைடு லேசரைக் கண்டுபிடித்தார். அதன்பிறகு, லேசர் தொழில்நுட்பத்தில் புதிதாகக் கண்டுபிடிக்க ஒன்றுமில்லை என்று விஞ்ஞானிகள் கூறும் அளவுக்கு அவரது கண்டுபிடிப்பு முக்கியமானதாக இருந்தது. அவரைப் போன்று ஆராய்ச்சிகளில் ஆர்வமுள்ளவர்களையும், விஞ்ஞான மேதைகளையும் கண்டறிந்து ஊக்கப்படுத்தவும், கொண்டாடவும் தருணம் வந்துள்ளது என்றார் அவர்.
இந்திய லேசர் சங்கம், அணுசக்தித் துறை, அணு அறிவியல் ஆராய்ச்சி வாரியம் ஆகியவை இணைந்து லேசர் தொழில்நுட்ப கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர், கருத்தரங்க அமைப்பாளர் எஸ்.வி. நாகே, பேராசிரியர் அறிவொளி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply