இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி பேரினவாத சக்திகளுக்கு அச்சப்படுவதில் அர்த்தமில்லை: ஆர். யோகராஜன்
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேரினவாத சக்திகளுக்கு அச்சப்படுவதில் அர்த்தமில்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் இனப்பிரச்சினைக்கான தீர்வை சிக்கலுக்குள் தள்ளிவிடாது தேசத்தின் நலன் கருதி தமிழர்களின் அதிகாரப் பகிர்வு கோரிக்கைகளுக்கு இசைந்து தைரியத்துடன் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவின் வருகை தொடர்பாகவும் அரசாங்கத்தின் பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பாகவும் கருத்துக் கேட்ட போதே யோகராஜன் இவ்வாறு தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ஆர். யோகராஜன் மேலும் தெரிவிக்கையில்;
அரசாங்கம் 19 பேரை பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களாக பெயர் குறிப்பிட்டுள்ளது. கூட்டமைப்பின் தரப்பிலும், ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்பன அது தொடர்பாக இதுவரை முடிவெடுக்கவில்லை. அதற்கு அடிப்படைக் காரணமாக ஜனாதிபதியின் மறுப்பான கருத்து அமைந்துள்ளது. “காணி, பொலிஸ்’ அதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதில் அனைத்து தமிழர்களும் பொதுக் கொள்கையுடன் உறுதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் காணி, பொலிஸ் அதிகாரங்களை தரமாட்டோம் என்று அடம்பிடிக்கும் ஜனாதிபதியிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்பதே சகல தரப்பினரதும் கேள்வி ? யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களின் பின்னர் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டி பேசிக் கொண்டிருப்பதன் மூலம் பெரும்பான்மை சமூகத்தை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
தமிழ் சமூகத்தின் பாரம்பரியங்களையும் வாழ்க்கை விழுமியங்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் மழுங்கடிப்பதற்கு எத்தனிக்கும் போக்கில் பேச்சுவார்த்தையை அரசதரப்பினர் குழப்பி சவால் விட்டுவருவது அறியாமையின் வெளிப்பாடு மட்டுமல்ல அநாவசிய அச்சத்தால் ஏற்பட்டுள்ள பதற்றமாகும். யுத்த மாயையின் தேர்தல் வெற்றிகளில் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளின் உண்மைத் தன்மையையும் எதிர்பார்ப்புகளையும் பலவீனப்படுத்துவதற்கு ஜனாதிபதின் பேச்சு முத்தாய்ப்பு வைத்துள்ளது. 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தில் இணைந்த வடக்கு, கிழக்கு காணி, பொலிஸ் அதிகாரம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கையும் இந்தியாவும் சர்வதேச ரீதியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக செய்து கொள்ளப்ப ட்ட ஒப்பந்தத்தை நிராகரித்து செயல்பட முடியாது. அதை மறுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. குடும்ப சக்தியுடன் சகலரையும் கட்டுப்படுத்தும் ஜனாதிபதிக்கு சகல பலமும் உள்ளது. இருந்தாலும் அவரது தயக்கத்திற்கும் தடுமாற்றத்திற்கும் அர்த்தமே இல்லை.
“இலங்கையில் தமிழர்களுக்கு இனப்பிரச்சினை இல்லை என்றும் அதிகாரப் பகிர்வு தேவையில்லை’ என்றும் ஜனாதிபதியின் சகோதரர் கோதாபய கூறிவருவதும் அதற்கு ஹல உறுமய, தேசப்பற்றுள்ள இயக்கம் என்பன இனவாத சாயம் பூசி ஆர்ப்பரிப்பதும் மேலும் சிக்கல்களையே ஏற்படுத்தும்.
வட,கிழக்கு தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளில் மலையக மக்களும் உட்படுத்தப்பட்டுள்ளார்கள். மலையகத்திலும் காணி, வீடுகளற்ற சமூகமாக பெருந்தோட்டத் துறை தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே மலையக சமூகத்தையும் உள்ளடக்கிய நிரந்தர தீர்வுக்கு வழி சமைப்பதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
சலுகைகளுக்காகவும், தங்களது சுயநல சுகபோகங்களுக்காகவும் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகளாக இருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் எதிர்கால சந்ததியின் நலன் கருதி ஒரு நிமிடம் கண்களை மூடி இதய சுத்தியுடன் சிந்தித்து பார்த்தால் தங்களது “துரோகத்தனம்’ மனச்சாட்சியில் தென்படும். ஆனால் இவர்களுக்கோ சிந்திப்பதற்கு நேரமே இல்லை. ஜனாதிபதியை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்காக வாயில் வந்ததை எல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களின் விடுதலைக்கும் ஜனநாயக வாழ்வியல் தேவைக்கும் மலையக மக்களின் ஜீவாதார உரிமைக்கும் குரல் கொடுத்துப் போராடுவதை சிங்கள மக்கள் இனவாதமாக கருதக்கூடாது. அதேவேளை பேரினவாதத்தை தூண்டிவரும் இனவாத ஹெல உரிமை, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்பவற்றை மேலும் வளர விடுவதால் தேசிய இனங்களுக்கிடையே மேலும் பிரச்சினைகளும் பிளவுகளுமே அதிகரிக்கும். சர்வதேச ரீதியில் இலங்கைக்கு மேலும் அவப்பெயர்களே அதிகரிக்கும் என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்வதே இன்றைய அதிமுக்கிய அரசியல் தேவையாகும். அதிகாரப் பகிர்வே அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு சிறந்த வழி என்பதை ஜனாதிபதிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே சகல தமிழர்களின் எதிர்ப்பாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply