அரசியல் தீர்வு விவகாரத்தில் இனவாத அரசியலுக்கு இடமல்லை
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு தென்னாசியப் பிராந்தியத்தில் முதன்மைப் பாத்திரத்தை வகிக்கும் இந்தியாவுக்கு உண்டு என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் சிரேஷ்ட பேராசிரியர்களுள் ஒருவரான சுமனசிறி லியனகே தெரிவித்துள்ளார்.
‘இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் இந்தியாவுக்கு உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர்.
இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை வழங்குவோம் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே தெரிவித்துள்ளார்.
எனவே, புதுடில்லிக்கு இவர்கள் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கததுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு தென்னாசியப் பிராந்தியத்தில் முதன்மைப் பாத்திரத்தை வகிக்கும் இந்தியாவுக்கு உண்டு.
இந்தியா இவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்குமானால் மந்தகதியில் இடம்பெற்று வரும் அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயணம் சாதகமான ஒரு திசையை நோக்கிப் பயணிக்கும்’ என சுமனசிறி லியனகே கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
‘தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதக் கட்சிகள் சில கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இத்தகையோரின் கருத்துக்களைக் கேட்டு இலங்கை அரசாங்கம் செயற்படுமானால் தேசிய அரசியல் என்ற கோட்பாட்டை மீறி, அது இனவாத அரசியல் என்ற அர்த்தத்தையே பெறும்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினருக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு காணப்பட்டு, அந்த இணக்கப்பாட்டை நாடாளுமன்ற தெரிவுக்குழு பரிசீலிக்க வேண்டும். இதுவே யதார்த்தபூர்வமான அரசியலாகும்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரபபினருக்கு இடையில் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. அவ்வாறு இருக்குமாயின் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு சாத்தியப்படாது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் புரிந்துணர்வு மற்றும் இதயசுத்தி என்பன முன்மையான பாத்திரத்தை வகிக்க வேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதக் கட்சிகள் சில கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படுமானால், அது தேசிய அரசியல் என்ற கோட்பாட்டை மீறிச் செயற்படுவதாகவே அமையும்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காண்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை இலங்கையி பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளமை சரியானதொரு முடிவாகும் என்பதையே கடந்தகால வரலாறு எமக்கு உணர்த்துகின்றது. எதிர்க்கட்சிகளின் இம்முடிவை அரசியல் சாணக்கியம் என்றும் கூறலாம்.
இலங்கை அரசாங்கத்தின் கபடத்தனம் காரணமாகவே எதிர்க்கட்சிகள் இத்தகையதொரு முடிவை எடுத்துள்ளன. வரலாற்று ரீதியாகப் பார்க்கப் போனால் இது சரியானதொரு முடிவாகும்.
உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அதிகாரப் பகிர்வு என்ற விடயமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரப் பகிர்வை இலங்கை அரசாங்கம் எதிர்க்குமானால், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இது புறக்கணித்துள்ளது என்றே எண்ணத்தோன்றும்.
உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய பின்னரே இலங்கை அரசாங்கம் ஏனைய குழுக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அவ்வாறு செய்யும் பட்சத்தில் எதிர்க்கட்சிகள் உட்பட மக்களின் மனங்களையும் வென்றெடுக்கலாம்’ எனவும் பேராசிரியர் சுமனசிறி லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply