இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசுக்கு அக்கறை இல்லை: சுரேஷ்

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுக்களில் அரசுக்கு அக்கறையில்லை. குழுக்கள் நியமிப்பதைத் தவிர அரசு ஆக்கபூர்வமாக எதுவுமே மேற்கொள்ளவில்லை. இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு கூட்டமைப்புப் பிரதி நிதிகளை நியமிக்காவிட்டால் கூட்டமைப்புடனான பேச்சு நடைபெறாது என பத்திரிகைகளில் செய்தி வெளியான போதும் இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எமக்கு அறிவிக்கப்படவில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன்  கூறியதாவது,

இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாகவே கூட்டமைப்புடன் அரசு ஒரு வருடத்துக்கு முன்னர் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது. ஒரு வருடம் கழிந்த நிலையிலும் பேச்சுவார்த்தை ஓர் அங்குலம் கூட முன் நகரவில்லை.

இனப்பிரச்சினை தீர்வுக்காக நாம் வழங்கிய தீர்வுத்திட்டம் குறித்தும் அரசு காத்திரமான பதிலெதுவும் தரவில்லை. யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்களாகின்றன. இருந்தும் யாழ்.குடா நாடு இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னும் இருக்கின்றன. காணாமல் போன தமது பிள்ளைகளை, உறவுகளை இன்றும் ஆயிரக்கணக்கானோர் தேடியலைகின்றனர்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்து மக்களை ஒரு வருடத்துக்குள் மீள் குடியமர்த்துவதாக அரசு இந்தியாவுக்கு உறுதியளித்தது. ஆனால் இன்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை. மொத்தத்தில் இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது.

புலிகள் மீண்டும் செயற்பட முனைவதாகவும் அரசு பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படா விட்டால் இந்தியாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடக்கூடும். இவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply