இனப்பிரச்சினையை ஏக பௌத்த கொள்கையால் தீர்த்து வைக்க முடியாது
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் 13வது திருத்தச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், மற்றவர்களின் கருத்துக்கு செவிமடுத்து இந்தியாவுடனோ அல்லது இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவுடனோ முரண்படுவது அர்த்தமற்ற செயல் என அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினையை தனி பௌத்த கொள்கைகள் தீர்த்து வைக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஜாதிக ஹெல உறுமய போன்றவர்களின் அரசியல் தீர்வுக்கான எதிர்ப்புகளானது வெறும் அரசியல் நோக்கங்களையே கொண்டது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளதாவது:
‘இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாகவே 13வது திருத்தச் சட்டம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது. இதனை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் ஒப்பந்த ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளன.
இலங்கையில் கடந்த காலங்களில் போர் இடம்பெற்ற காரணத்தினால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது கடினமான இருந்தது.
ஆனால் தற்போது அவ்வாறானதொரு சூழ்நிலை இன்றி நாட்டில் சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த ஏற்ற காலமாகத் தற்போதைய கால கட்டத்தை கூறலாம். இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்துகின்றது.
இதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இலங்கை அரசியலமைப்பில் காணப்படுவதை நடைமுறைப்படுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும். 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜாதிக ஹெல உறுமய போன்ற சிறுபிரிவினரே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இந்த எதிர்ப்புகளும் எவ்வித அடிப்படைத் தன்மையும் அற்றவை. இலங்கைக்கு தனி பௌத்த கொள்கைகள் ஒவ்வாது. மாறாக பல்லின சமூகங்களுககு ஏற்ற கொள்கைகள் அத்தியாவசியமானது’ என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இன்று கொழும்புக்கு விஜயம் செய்யும் நிலையில்,
இந்தியாவின் தேவைகளுக்காக 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவோ, காணி பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்கவோ முடியாது என ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply