கூட்டமைப்புடன் அரசின் பேச்சுவார்த்தைகள் தொடருமா?

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுமா என்பது குறித்து கேள்விக் குறிகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இலங்கையில் இருக்கும் வேளையில், இம்மாதம் 17 ஆம் தேதி(செவ்வாய்கிழமை) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை.

திட்டமிட்டபடி தமது தரப்பினர் கூட்டத்துக்கு வந்த போதிலும், அரசு தரப்பிலிருந்து யாரும் வரவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா சம்பந்தர்  தெரிவித்தார்.

அரசால் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு கூட்டமைப்பினர் தமது உறுப்பினரை நியமிக்க முன்வராத நிலையில், அரச தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறமாட்டாது என்று சில கருத்துக்கள் முன்பே வெளிவந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இருந்தாலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என மற்றொரு அரசு தரப்பிலிருந்து கருத்து வந்ததாலேயே தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

தமக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்தே, தடைபட்டிருந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கின என்றும், அவருடன் செய்துகொண்ட உடன்பாட்டுக்கு மாறாக கூட்டமைப்பினர் எதையும் செய்யாத நிலையில், அரசாங்கம் வித்தியாசமாக நடக்க வேண்டியத் தேவை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

புதன்கிழமையன்றும் திட்டமிட்டபடி பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை.
தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலமாகவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் தெளிவாக தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது எனவும் சம்பந்தர்  கூறினார்.

கூட்டமைப்பினர் ஏன் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு உறுப்பினரை நியமிக்கவில்லை என்பதை இலங்கை அரசுக்கும், இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் தெளிவாக விளக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகளின் மூலமே ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை தமது தரப்பு விரும்புவதாகவும், அதே சமயம் அது முறையாக நடைபெற வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் சம்பந்தர் கூறுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply