தேர்தலில் போட்டியிட ஆங் சான் சூகி வேட்பு மனு தாக்கல்
மியன்மாரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, அந்நாட்டின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகி, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மியன்மார் அரசு, அரசியல் கைதிகளை விடுவித்தல், அரசியல் கட்சிகளை அங்கீகரித்தல், பழங்குடியினருடனான மோதலை நிறுத்தி வைத்தல் என சமீப காலமாக பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கலாம் என அரசு கருதுகிறது.
இந்நிலையில் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் 48 இடங்களுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. அதில் ஆங் சான் சூகி போட்டியிடுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.
முதற்கட்டமாக, அவரின் தேசிய ஜனநாயக லீக் கட்சி, தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது, யாங்கூன் அருகில் உள்ள காவ்மு என்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக, நேற்று அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அவர் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடவில்லை என்றாலும் கட்சியின் மூத்த பிரமுகர் வின் டெயின் நேற்று அளித்த பேட்டியில், “கட்சியின் முதல் நபராக சூகி தன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்’ என்றார்.
மொத்தமுள்ள 48 இடங்களில், 40 இடங்களில் சூகியின் கட்சி தன் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply