இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினையை உதாசீனம் செய்யும்

இலங்கை அரசாங்கம் தனது பிராந்திய நலன்களுக்கு ஏற்புடையதாகவும், குந்தகம் விளைவிக்காத வகையிலும் நடந்து கொள்ளும்போது, இந்திய அரசாங்கம் தமிழர் பிரச்சினையை உதாசீனம் செய்துவிடும், என்பதையே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் வருகை தமிழர் தரப்பிற்குச் சொல்லியிருக்கும் வரலாற்றுப்பாடம்.

இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு இனிமேலாவது 13, 13+ என்ற வார்த்தை ஜாலங்களை விடுத்து சுயநிர்ணய உரிமைப்பாதையை கூட்டமைப்பு தெரிவு செய்யவேண்டும், யார் வரினும் இப்போதுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பிரகாரமே தீர்வினை முன்வைக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் வருகை மற்றும், இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில் குடநாட்டிலுள்ள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், கிருஸ்ணாவின் வருகை தமிழர் பிரச்சினை தீர்வு விடயத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என கருத்துக்கள் பரப்பப்பட்டன. ஆனால் அமைச்சரின் இந்த விஜயம் தமிழர்களின் நலன்களை அடிப்படையாக கொண்டதில்லை, இந்தியா தனது நலன்சார்ந்த வகையிலேயே இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில் தமிழர்கள் ஏமாற்றத்தையே அனுபவித்திருக்கின்றார்கள்.

இதேபோல் கொழும்பில் 13 பிளஸ் என்றும், யாழ்ப்பாணத்தில் 13 என்றும் இடத்திற்கொரு கதையினை கிருஸ்ணா குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பிரகாரம் 13வது திருத்தத்திற்கு அப்பால் ஒரு தீர்வினை யார் வந்தாலும் வழங்கவே முடியாது. அவ்வாறு வழங்குவதாக இருப்பினும், அதிகாரப் பரவலாக்கல் தவிர (மாகாணசபை) வேறு எந்த தீர்வினையும் வழங்கமுடியாது;, அதிகாரப்பகிர்வென்பதோ, அல்லது அதற்கு மேல் என்பதோ இந்த அரசியலமைப்பிற்குள் சாத்தியமில்லை.

யதார்த்தம் அவ்வாறிருக்க அதிகார பகிர்வு என்ற சொல் பயன்படுத்துவதன் மூலம் தமிழர்களை ஏமாற்றும் முயற்சியே நடைபெற்று வருகின்றது. மேலும் 13வது திருதம் பற்றி கிருஸ்ணா பேசியிருப்பது மிகுந்த கவலையளிக்கின்றது. சில வாரங்களுக்கு முன்னர் தமிழர் பிரதேசத்திலுள்ள புத்திஜீவிகள், சமூகப்பெரியார்களை உள்ளடக்கிய சிவில் சமூக அமைப்பொன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வு எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளன.

அதில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வென்பது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் அமையவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இது இந்தியாவுக்குத் தெரியாதவொன்றல்ல. ஆனால் சிவில் சமூகத்தின் கருத்துக்களை கருத்தில் கொள்ளாது 13வது திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருப்பது இந்தியா தமிழர் நலனை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை என்பது தெளிவாகின்றது.

கிருஸ்ணா இலங்கையில் இருக்கும்போதே, கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு பேசாது அவமானப்படுத்தி அனுப்பியிருக்கின்றது. இவ்வாறு இலங்கை அரசு செயற்பட்டமைக்கு காரணம் கூட்டமைப்பை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் வரச்செய்வதேயாகும், அவ்வாறான செயற்பாட்டிற்கு கிருஸ்ணாவும் பச்சைக் கொடி காட்டியிருப்பதன் காரணமாகவே அரசாங்கம் தமிழர் பிரதிநிதிகளை இவ்வளவு தூரம் கேவலமாக நடத்துகின்றது.

இந்த நிலையில் இந்தியா விரும்புகிறது என்பதற்காக தெரிவுக்குழுவிற்குள் செல்லும் முயற்சியில் கூட்டமைப்பு இறங்கக் கூடாது. இது தமிழர்களை அழிக்கும், இந்தியாவின் நலன்கள் நிறைவேற்றப்படும்போது இந்தியா தமிழர்களை நடுத்தெருவில்; விடும் என்பதை கூட்டமைப்பு இனிமேலாவது புரிந்து கொண்டு நாம் வலியுறுத்திவரும் சுயநிர்ணய உரிமைப்பாதைக்கு வரவேண்டும்.

இதைவிடவும், முன்னர்தான் வந்திருந்தபோது இருந்ததைப்போன்ற தற்பேர்து நிலைமை இல்லை என குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அன்றிருந்த நிலைமை இன்றும் இருக்கின்றது. ஆனால் மாற்று வடிவத்தில் இருக்கின்றது. இதுவே வித்தியாசம், ஒவ்வொரு தடவையும் இராஜதந்திரிகள் வருகை தரும்போதும் உண்மைகள் மூடி மறைக்கப்படுகின்றன. அவர் வருகை தந்திருந்தபோதும் கூட வறுமையினால் முள்ளியவளையில் இளம் குடும்பம் தூக்கில் தொங்கி உயிரிழந்தது.

நிலைமை இவ்வாறிருக்க தமிழர்களின் துயரங்களையும், சோகங்களையும் மூடி மறைக்கும் வகையில், இங்குள்ள நிலைமைகளை சர்வதேசம் தவறாக புரிந்து கொள்ளும் வகையில் கிருஸ்ணாவின் உரைகள் அமைந்திருக்கின்றன. எனவே இந்த நிலை எப்போதும் தமிழர்களுக்கு நன்மையளிக்கப் போவதில்லை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply