ஆட்கடத்தல்களுக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு

இலங்கையில் வடக்கே அண்மைக் காலங்களில் நடந்துள்ள ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல்போதல் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

சரத் பொன்சேகா பதவியிலிருந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் நிதிமோசடி தொடர்பான ஹைகோர்ப் வழக்குக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட போதே அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த டிசம்பர் 09ம் திகதி காணாமல்போன லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பில் தகவல்கள் ஏதுமில்லையென்று அரசாங்கம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.

இவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் பொலிசாரிடம் தகவல்கள் இல்லையென்று பொலிஸ் அறிக்கையை மேற்கோள்காட்டி அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

வெள்ளிக்கிழமை நீதிமன்றத்திற்கு வந்தபோது ஊடகங்களுக்காக பேசிய முன்னாள் இராணுவத் தளபதி, ஆட்கடத்தல்களைக் கண்டிப்பதாகவும் அந்தக் கடத்தல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, சரத் பொன்சேகா இராணுத் தளபதியாக இருந்தகாலத்திலும் பெருமளவிலான ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல்போதல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் மீது குற்றஞ்சாட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, காணாமல்போன இருவரையும் நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுவருமாறு யாழ் இராணுவக் கட்டளையதிகாரிக்கு உத்தரவிடக்கோரி தாக்கல்செய்யப்பட்டிருந்த மனுவொன்றை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நிகழ்வொன்றை நடத்துவதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தபோதே ஜேவிபியின் மக்கள் போராட்டக்குழுவின் செயற்பாட்டாளர்கள் இருவரும் காணாமல்போனமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply