சிதம்பரத்திற்கு எதிராக சுவாமி வழக்கு: தீர்ப்பு பெப்ரவரி 4 இல்

இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சுப்ரமணியன் சுவாமியின் வாதம்  முடிவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் பிரதான குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஆ. ராசாவுடன், ப. சிதம்பரமும் சமபங்கு குற்றம் புரிந்திருக்கிறார் என்பது, நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் பூர்வாங்கமாகத் தெரிய வருவதாக சுவாமி தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பிற கிரிமினல் சட்டங்களின் கீழ் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதற்கு தான் தாக்கல் செய்த ஆவணங்கள் போதுமானவை என்று நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

சிதம்பரம் தேசிய பாதுகாப்பு நம்பிக்கையை மீறிவிட்டதாகவும், ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் வயர்லெஸ் நிறுவனங்களின் பங்குகள் மாற்றப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களான எடிசலாட் மற்றும் டெலினார் ஆகியவை கறுப்புப் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் என்ற தகவலை மறைத்துவிட்டதாகவும் சுவாமி கூறியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில் இருந்தவர்களில் கனிமொழி உட்பட பெரும்பாலானவர்களுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சித்தார்த்த பெஹுராவின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தற்போது ஆ. ராசா மட்டும் இதுவரை ஜாமீன் கோரவில்லை.

இதற்கிடையில், டெல்லி காமன்வெல்த் போட்டி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட போட்டி ஏற்பாட்டுக்குழுவின் நிர்வாகிகள் லலித் பானோட் மற்றும் ஜெயச்சந்திரனுக்கு சிறப்பு நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், தங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என அவர்கள் இருவரும் கோரியிருந்தனர்.

கல்மாதியும் மேலும் 10 பேரும் காமன்வெல்த் போட்டிகளுக்கான நேரம் மற்றும் புள்ளிகள் கணக்கிடும் இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய அதிகமான கட்டணத்தில் ஒப்பந்தம் வழங்கியதால் அரசுக்கு 90 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிபிஐ இதுதொடர்பாக, கடந்த மே மாதம் முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply