காணி காவல்துறை விடயங்களில் கூட்டமைப்புடன் ஒருமித்த கருத்து

‘வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் நானும் எனது தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனேயே உள்ளோம் ‘ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் நானும் எனது தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனேயே உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அக் கடிதத்தில் முதலமைச்சர் சந்திரகாந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

‘கிழக்கு மாகாண மக்களின் ஆணையைப் பெற்ற முதலமைச்சர் என்ற தோரணைக்கு அப்பால், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் 15 வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் போராடியவன் என்ற ரீதியிலும், எம்மக்களின் அழிவுகளை, இழப்புகளை, இடம்பெயர்வுகளை நேரடியாகக் கண்ணுற்று அனுபவித்தவன் என்ற வகையிலும் இவை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எம்மக்களுக்கு ஏற்படக்கூடாது மிக உறுதியாகச் செயற்படும் குடிமகன் என்ற வகையிலும் இந்த மடலை உங்களுக்கு வரைகிறேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை பற்றிப் பேச கொழும்பிலுள்ள தங்களின் வாசஸ்தலத்தை நாடி வந்தபோது, ‘நான் கிழக்கு மாகாணத்தையோ அதன் முதலமைச்சரையோ ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று கிழக்கு மக்களின் சுயாதீனத்தையும், இறைமையையும் தாங்கள் நிராகரித்த போதும் கூட, தங்களுக்கு எம் மக்களின் சார்பாக இந்த மடலை வரையக் காரணம் ஒட்டு மொத்த தமிழினத்தின் சுபீட்சமான நிம்மதியான நிகழ்கால எதிர்கால நலன்களைத்தவிர குறுகிய அரசியல் நோக்கங்கள் அல்ல என்பதை தாங்கள் முதல்கண் உணர்வீர்கள் என நம்புகிறேன்.

அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த 18 மாதங்ககளாக 15 சுற்றுக்களாக நடத்திவரும் பேச்சுவார்த்தையில் பேசப்படும் விடயங்கள், தமிழ்மக்களின் சார்பாக கூட்டமைப்பினரால் முன்வைக்கப்படும் அதிகாரப்பகிர்வுக்கான யோசனைகள் இதுவரை கூட்டமைப்பினரால் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கோ, நாட்டுக்கோ பகிரங்கப்படுத்தப்படவில்லை.

பேச்சுவார்த்தைக்காக அரசாங்கம் அழைப்பதும் சில சுற்றுக்கள் கூடிக் கதைப்பதும் திருப்தி இல்லை என கூட்டமைப்பினர் விலகிக் கொள்வதாக அறிவிப்பதும் பின் அரசாங்கத்துடன் பேசுவதும் என இருதரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையானது தொடர்கதை போல நீள இந்தப் பேச்சுவார்த்தையின் உண்மையான நிலையும் அதில் மறைந்துள்ள மர்மங்களும் தந்திரங்களும் தங்களுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாத்திரமே தெரியும் என நம்புகிறேன்.

ஆனாலும் அண்மைக்காலமாக ஊடகங்களிலும் அரச தரப்பினராலும் வெளியிடப்படும் கருத்துக்களின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் மாகாண சபைகளுக்கான காணி, காவல்துறை அதிகாரங்கள் மற்றும் வட கிழக்கு இணைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்துவதாக ஊகிக்க முடிகின்றது.

எம் இந்த யூகம் உண்மையாக இருக்குமானால் வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் நானும் எனது தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனேயே உள்ளோம். வட கிழக்கு இணைப்பின் சாத்தியப்பாடு குறித்தும் அதில் கிழக்கு மாகாண மக்களது அபிலாசைகள் பற்றியும் தங்களுடன் விரிவாக கலந்துரையாட நாம் தயாராகவுள்ளோம்.

மாகாணங்களுக்கான காணி, காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் பேசுவதற்கு கூட்டமைப்பினர், புலிகள் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரே முன்வந்துள்ளனர் என்பதுடன் நாம் அதற்கு முன்பிருந்தே மாகாண சபையினைப் பொறுப்பேற்றதிலிருந்து இன்றுவரை குரல் கொத்தும் அதனை பெறுவதற்கும் நாம் முயன்று வருகிறோம்.

எவ்வாறாயினும் மாகாண சபை முறைமை தொடர்பிலும் மாகாண சபை கட்டமைப்பின் 13ஆவது அரசியல் அதிகாரப்பங்கு தொடர்பிலும் நாம் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நேரடியாகத் தொடர்பு பட்டிருக்கிறோம். எனவே தாங்கள் அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வுக்காக மாகாண சபை முறைமையையும் 13ஆவது அரசியல் அதிகாரத்தையும் வலியுறுத்துவீர்களாயின் அது தொடர்பில் கூட்டமைப்புடன் திறந்த மனதுடன் எம்மக்களின் நலனுக்காக பேசுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதுடன் பேச்சுவார்த்தைக்கான பகிரங்க அழைப்பையும் விடுக்கிறேன்.

இனிமேலும் அடையமுடியாத இலட்சியங்களுக்காகவும், கோஷங்களுக்காகவும் எம்மக்களை பலி கொடுக்காமல் யதார்த்த பூர்வமாக அரசியல் தீர்வுக்காக நாம் கரம் கோர்த்து செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டாயமும் வரலாற்று கடமையுமாகும் என்பதை மிக மூத்த அரசியல்வாதியும் பழுத்த அனுபவசாலியுமான தங்களுக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை.

எனவே மேற்குறித்த விடயங்கள் குறித்து பேசுவதற்கு இக்கடிதம் கிடைக்கப்பெற்று 15 நாட்களுக்குள் தங்களிடமிருந்து ஆக்கபூர்வமான பதிலை எதிர்பார்க்கிறேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply