கலாமின் யாழ். நிகழ்வுக்கு அலையெனத் திரண்ட கூட்டம்
யாழ் பல்கலைக்கழகத்தில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தினால் ஊடகவியலாளர்களே கலகந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது. இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த இந்தக் கூட்டத்துக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் அலையென திரண்டு கலந்துகொள்ள வருகை தந்திருந்தனர்.
எனினும், அதிகளவில் வந்திருந்த மாணவர்களால் கைலாசபதி கலையரங்கு 11 மணிக்கு முன்பதாகவே நிரம்பி வழிய, நூற்றுக்கணக்கான மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்களும், ஊடகவியலாளர்களும் மண்டபத்துக்கு வெளியே காத்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட தாமதமாகவே இந்திய முன்னாள் ஜனாதிபதி கலாம் அங்கு வருகை தந்தபோதும், நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் அவரைச் சூழ்ந்துகொள்ள, பொலிஸாரும், அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவினரும் மிகுந்த சிரமத்தின் மத்தியில் அவரை மண்டபத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
அப்துல் கலாமின் கூட்டத்தில் செய்தி சேகரிக்கவென அங்கே வருகை தந்திருந்த பெருமளவு ஊடகவியலாளர்கள் மண்டபத்துக்குள்ளே செல்ல முடியாத நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
டான் ரீவி, சக்தி ரீவி, வீரகேசரி, தினக்குரல், வலம்புரி, யாழ் தினகரன் உள்ளிட்ட பல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் வெளியில் காத்திருந்துவிட்டுத் திரும்பிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
இந்த நிலைமை தொடர்பான அங்கிருந்த இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் கேட்டபோது, நிகழ்வை ஒழுங்குபடுத்தியது பல்கலைக்கழகமே என்றும் இதற்குத் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கைவிரித்துவிட்டனர்.
பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினர் இதுதொடர்பாகக் கூறியபோது, தம்மால் ஒன்றும் செய்ய முடியாதிருப்பதாகவும். நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திய நிர்வாகம் இதனைச் சரிவரச் செய்திருக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
“கைலாசபதி கலையரங்கில் 600 பேரே இருக்க முடியும். அதனால்தான் பட்டமளிப்பு விழாவையே பல அரங்குகளாகப் பிரித்து நடத்துகிறார்கள். அப்படியிருக்க, இந்த நிகழ்ச்சியை கலையரங்கில் வைக்கத் திட்டமிட்டது பொருத்தமில்லாத வேலை” என்றார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர்.
“நிகழ்ச்சியொன்றை ஒழுங்குபடுத்தும்போது அதில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள், ஊடகவியலாளர்களுக்கென தனியே இடமொதுக்கப்படுவதேவழமை. இங்கே 11 மணிக்கே மண்டபம் நிரம்ப ஆட்களை அனுமதித்துவிட்டு ஊடகவியலாளர்களையும், பேராசிரியர்கள் மற்றும் கல்விமான்களையும் வெளியே விட்டிருப்பது வேதனையான செயல்” என்றார் அங்கு வந்திருந்த மூத்த ஊடகவியலாளர் ஒருவர்.
“அப்துல் கலாமின் வருகை குறித்து அதிகளவு எதிர்பார்ப்புக் காணப்பட்டமையால், திறந்தவெளி அரங்கில் இந்தக் கூட்டத்தை விசேட மேடையமைத்து ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் மண்டபத்துக்கு வெளியே ஒலிபெருக்கிகளையும், விசேட வீடியோ காட்சித் திரைகளையும் அமைத்து அனைவரும் கலாமின் உரையை கேட்க ஏற்பாடு செய்திருக்கலாம். ஏன் பல்கலைக்கழகத்தினால் இதைச் செய்ய முடியாமல் போனது?” என்று கேள்வியெழுப்பினார் மற்றுமொரு ஊடகவியலாளர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply