தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்: சிறிரெலோ தலைவர் உதயராசா

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிலைப்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கவேண்டும். இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம் என்று சிறிரெலோ கட்சியின் தலைவர் ப. உதயராசா தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதுடன் அரசு சாராத தமிழ் கட்சிகளையும் கூட்டிணைத்து செயற்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் எம். பி.யுமான சுரேஷ் பிரேமச்ந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்து கேட்டபோதே சிறிரெலோ தலைவர் உதயராசா மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவானது வரவேற்கத்தக்கதாகும். அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் இக்கட்டான சூழ்நிலையினை அடைந்துள்ள நிலையில் கூட்டமைப்பு இத்தகைய முடிவினை எடுத்துள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்படாது விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு தீர்வினை காணவேண்டியது இன்றியமையாததாகும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணும் விடயத்தில் கூட்டமைப்புடன் ஒத்துழைத்து ஒருமைப்பாட்டுடன் செயற்படுவதற்கு நாம் என்றுமே தயாராக உள்ளோம். கடந்த மூன்று தசாப்தங்களாக அழிவுகளையும், இன்னல்களையும் சந்தித்து வந்த தமிழ் மக்கள் இனியும் கஷ்டங்களை அனுபவிக்க முடியாது. எனவே தீர்வு விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

தமிழ் மக்கள் இன்று தமிழ் கட்சிகள், ஒற்றுமைப்படுவதையே விரும்புகின்றனர். தமிழ் மக்களின் விருப்புக்கிணங்க கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற நாம் தயாராக உள்ளோம். கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி. இவ்விடயம் குறித்து கருத்துத் தெவித்துள்ளமை வரவேற்கத்தக்கது. பேச்ளவின்றி செயலளவில் ஒற்றுமை முயற்சியை நடைமுறைப்படுத்த சகல தரப்பும் விட்டுக் கொடுப்புக்களுடன் முன்வரவேண்டும். இதுவே எமது நிலைப்பாடாகும்.

http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=24_01_2012_002_007&mode=1

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply