ஜே.வி.பி.க்கு எதிராக யாழ் நகரில் சுதந்திரக் கட்சி ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் எந்தவித தலையீடும் இருக்கக் கூடாது எனக் கோரியும் இங்குள்ள மக்களை குழப்ப வேண்டாம் எனக் கோரியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆரம்பித்துள்ள இந்த ஆர்ப்பாட்டம் அங்கிருந்து பேரணியாக யாழ். பஸ் நிலையத்தை சென்றடையவுள்ளதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுமக்கள் தொடர்பான அதிகாரியொருவர் கூறினார். அந்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில்;

“யாழ்ப்பாணத்தில் இதற்கு முன்னரும் பல காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அத்தருணங்களில் மக்கள் விடுதலை முன்னணியினர் மௌனம் சாதித்திருந்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள மக்களை குழப்புவதற்காகவே காணாமல் போன சம்பவங்களை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது மக்கள் விடுதலை முன்னணியின் உள்வீட்டுப் பிரச்சினை. இவர்களின் உள்வீட்டுப் பிரச்சினையை யாழ்ப்பாணத்தில் தீர்த்து வைப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள பிரச்சினைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் அங்கஜன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு தீர்த்துவைப்பார்’ என அவர் கூறினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட இணைப்புச் செயலாளர் ஏ.கே சுந்தரம்,

‘யுத்தத்தை மீண்டும் இலங்கைத் தீவில் ஏற்படுத்தி இரத்த ஆறு ஓட வைக்க முயல்கிறது மக்கள் விடுதலை முன்னணி. இந்த நாட்டில் யுத்தத்தை தூண்டி தமிழ் மக்களை மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு செல்ல முயற்சிக்கின்றது.

தமிழ் மக்களின் தீர்வுத்திட்டத்தை குழப்பி அதற்கு எதிராக போராடியவர்கள் இன்று தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யாழ். மண்ணுக்கு மக்கள் விடுதலை முன்னணி வருகை தரக் கூடாது. அவர்கள் தங்களது வேலைகளை தென்பகுதியில் வைத்துக் கொள்ளட்டும்.

யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணயினர் கால் வைத்து தங்களது அரசியல் நடவடிக்கைகளுக்காக யாழ். மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழிக்கின்றனர்’ என கூறினார்.

தொண்டர் ஆசிரியர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள பொது அமைப்புக்கள், மீனவ சமூகத்தவர்கள் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply