டுவிட்டரில் புதிய தணிக்கை தொழில்நுட்பம்

ஒரு நாட்டில் ஆட்சேபணைக்குரியதாக அமைந்துள்ள குறுந்தகவல்களை அந்த நாட்டில் மட்டும் இணையத்தில் வரவிடாமல் செய்கின்ற தொழில்நுட்பத்தை தாங்கள் இப்போது பெற்றிருப்பதாக டுவிட்டர் இணைய குறுந்தகவல் பரிமாற்ற சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட நபர்கள் வழங்கும் தகவல்களை குறிப்பிட்ட நாட்டில் மட்டும் தெரியவிடாமல் செய்ய இனி தங்களால் முடியும் என டுவிட்டர் தனது வலைப்பூ பதிவில் கூறியிருக்கிறது.

இதற்கு முன்புவரை, டுவிட்டர் குறிப்பிட்ட ஒரு குறுந்தகவலை இணையதத்தில் இருந்து நீக்கினால், அதனை உலகில் எங்கிருந்துமே பார்க்க முடியாது என்ற நிலை இருந்துவந்தது.

ஆனால் இனி ஒரு நாட்டில் தெரியவிடாமலும், அதேநேரம் மற்ற நாடுகளில் தெரிகிற விதமாகவும் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

உலக அளவில் தங்களது சேவையை விரிபடுத்தும் முயற்சிகளை டுவிட்டர் மேற்கொண்டுவரும் ஒரு சூழலில் அந்நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தைப் பெறுகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் என்பனவற்றை ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாக அணுகுகின்றன என்பதால், சர்வதேச அளவில் தமது சேவைகளை விருத்தி செய்ய இந்தத் தொழில்நுட்பம் அவசியமாகிறது என டுவிட்டர் இதற்கு விளக்கம் தந்துள்ளது.

புகார் வரும் விஷயங்களை புகார் வரும் நாடுகளில் மட்டும் இணையத்தில் வரவிடாமல் செய்வதை கூகுள் பல ஆண்டுகளாகச் செய்துவருகிறது.

கூகுளின் பாணியில் டுவிட்டரும் முடிவெடுத்திருப்பது கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கும் என டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி பெரும் இயக்கங்களாக உருப்பெற டுவிட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரும் பங்காற்றியிருந்தன.

டுவிட்டரை உலக அளவில் பத்து கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply