கூட்டமைப்பு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை கோருவதற்கு முன்னரே கிழக்கு மாகாண சபை கோரி வருகின்றது
அரசியல் உள்இணைவுகளுக்கு சில கோரிக்கைகள் விடுக்கப்படும் போதும் முயற்சிகள் செய்யப்படும் போதும் அதனைப் பொதுநோக்கில் பார்ப்பதே சிறந்ததாக இருக்கும் என்பதுடன், கூட்டமைப்பு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை கோருவதற்கு முன்னரே கிழக்கு மாகாண சபை கோரி வருகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எட்வின் கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் கிழக்கு முதலமைச்சருக்குமிடையில் நடைபெறவுள்ள பேச்சினைக் குழப்ப முனையும் அமைப்புகள் குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எட்வின் கிருஸ்ணானந்தராஜா ‘கிழக்கில் செயற்பாட்டில் இல்லாத அநாமதேய அமைப்புக்கள் அறிக்கைகளை விடுவதனை விடுத்து பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ்தேசியக் கூட்டமைப்பினை பேச்சுக்கு அழைத்தமையானது அரசியல் ரீதியாக, அனைத்து தமிழ் மக்களாலும் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட விடயமாகும்.
எல்லாக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வது என்பது தேவைப்பாடானதொன்றாகும். ஆனால் அதில் குறுகிய அரசியல் நோக்கங்களை வைத்துக்கொண்டு செயற்பாட்டில் இல்லாத அமைப்புகள் அறிக்கைகளை விடுவதானது சாணக்கியமாகதாது என்பதுடன் துரதிஷ்டவசமானதும் கூட.
கிழக்கு மாகாண சபையும், கிழக்கு மாகாண முதலமைச்சரும் சிலரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டாலும், கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின்னரே கிழக்கின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளும் முன்னேற்றங்களும் பாரிய மாற்றங்களைக் கண்டுகொண்டிருக்கிறது.
இதனை யாராலும் மறுக்க முடியாது. அரசியல் உரிமைகளைப் பெற்றாக வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பாரிய மாற்றங்கள் இல்லை. அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை கோருவதற்கு முன்னரே கிழக்கு மாகாண சபை கோரி வருகின்றது.
இருந்தும் கிழக்கு மாகாண சபையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் பங்காளிகளாகச் சேர்ந்து கொண்டதன் காரணத்தினால் இதுவரை காலங்களில் எட்டாக்கனிகளாக இரந்த தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியானது நடைபெற்று வருகிறது. இதுவரை காலமும் சகோதர இன மக்களின் பிரதேசங்களில் நடைபெறும் அபிவிருத்திகளை கண்டு ஏக்கத்துடன் இருந்த தமிழ் மக்கள் தங்களுடைய பிரதேசங்களும், கிராமங்களும் அபிவிருத்திகளைக் கண்டு வருவதனைக் கண்ணுற்று சிறிது நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
எனவே அரசியல் உள்நோக்கங்களுக்காக அரசியல் உள்இணைவுகளுக்கு சில கோரிக்கைகள் விடப்படும் போதும் முயற்சிகள் செய்யப்படும் போதும் அதனைப் பொது நோக்கில் பார்ப்பதே சிறந்ததாக இருக்கும் என்பதுடன், அரசியல் சுயலாபங்களுக்கு அப்பால் பார்க்கப்படவும் வேண்டும்.
மாறாக, ஒற்றுமைக்கான கோரிக்கைகள் விடப்படும் போது அறிக்கைகளை விடுவது எமது மாகாணமாக இருந்தாலும் சரி, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உரிமைசார்ந்த போராட்டங்களிலும், அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் மேலும் தேக்கநிலையையே ஏற்படுத்துமே தவிர ஆரோக்கியமானதாக அமையாது.
இப்போது கிழக்கு மாகாண முதலமைச்சரால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசுவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள கணிசமான அமைப்புக்கள் புத்திஜீவிகளிடம் ஆர்வமும் ஆதரவுமே காணப்படுகிறது.
எனவே கிழக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்புக்கு விமர்சனங்கள் விடுப்பதுடன், தடைகளை ஏற்படுத்த முனைவதை விட்டு ஆதரவு தெரிவிப்பதானது, தமிழ் மக்களின் எதிர்கால நோக்கங்கள் உரிமைகள் அதிகாரங்கள் பெற்றுககொள்வதற்கும் உதவக்கூடியதாக இருக்கும் என்பதே அனைத்து இலங்கை வாழ் தமிழ் மக்களதும் அபிலாசையாகக் காணப்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.”
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply