தமிழ் அரசியல் கைதிகளை சுதந்திர தினத்தில் விடுதலை செய்து நல்லெண்ணத்தை வெளிக்காட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

குற்றச்சாட்டுக்கள் இன்றி மிக நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நல்லெண்ணத்தை வெளிக்காட்டி வரும் சுதந்திர தினத்தில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தனி மனித சுதந்திரம் என்பது ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் கிடைக்காத வரையில் தேசிய சுதந்திரம் என்பதும் சுதந்திரக் கொண்டாட்டம் என்பதும் நாடு என்ற வகையில் போலியானதாகவே இருக்கும் என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளாக சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக் கையிலேயே கூட்டமைப்பின் பிரதிச் செயலாளரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த முன்னாள் புலிப் போராளிகள் புனர்வாழ்வளிக்கப் பட்டு கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றமை மகிழ்ச்சிக்குயதாகும். அதேபோல் வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறைகளில் தமது வாழ்நாளில் பாதிக் காலத்தைக் கடத்திவிட்ட தமிழ்க் கைதிகள் தொடர்பிலும் அரசாங்கம் சற்று கவனத்திற் கொள்ள வேண் டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மேற்படி அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல தடவைகளில் அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறிவிட்டது. குற்றவாளிகளாக இனங்காணப்பட்டோருக்கு கூட பொது மன்னிப்பு வழங்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்களின் விடுதலை குறித்து சிந்திக்காதிருப்பது கவலை தரும் விடயமாகும். தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர் பில் அனைத்து வகையான போராட் டங்களையும் நடத்தி விட்டனர். இனியும் அவர்களால் போராட்டங்களை நடத்துவதற்கான சக்தியில்லை.

இவர்களும் தமது உறவினர்களுடன் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் கடமையாக இருக்கிறது. எதிர்வரும் நான்காம் திகதி நாடு 64 ஆவது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கின்றது.

இந்நிலையில் எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளை சுதந்திர தினத்தன்று பொது மன்னிப்பு வழங்கி விடுவிப்பதற்கு ஜனாதிபதி தனது நல்லெண்ணத்தை வெளிக் காட்ட வேண்டும் என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையாகும்.

நாம் இலங்கையர் என்று அரசாங்கம் கூறுவது உண்மையெனில், எமது மக்கள் சிறைகளில் இருக்கின்ற நிலையில் அவர்களது விடுதலை குறித்து சிந்திக்காது சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் எந்த வித அர்த்தம் கிடையாது. எனவே, சுதந்திரம் என்பது சகலருக்கும் உரித்துடையது என்பதை அர்த்தப்படுத்துவதற்கு அரசாங்கம் முனைய வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply