மக்களை வரவழைக்க கிளிநொச்சியில் துரித அபிவிருத்தி திட்டம்
இலங்கை இராணுவத்தினர் அண்மையில் கைப்பற்றிய கிளிநொச்சி மாவட்டத்தைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசகர் பேசில் ராஜபக்ச கடந்த வெள்ளியன்று இதற்கென விசேட கலந்துரையாடலொன்றை ஜனாதிபதி செயலகத்தில் நடத்தினார்.
கிளிநொச்சியைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேறுவதற்கு ஊக்குவிப்பதே இந்தத் துரித அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழக(புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோருடன், அத்தியாவசிய சேவைகள் திணைக்கள ஆணையாளர் எஸ்.பி.திவாரத்ன மற்றும், கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார், வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட சுகாதார, அபிவிருத்தி, கல்வி, வீடமைப்புத் திணைக்கள அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் இந்தக் கலந்துரையாடலுக்குப் பார்வையாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டதும் அரசாங்க அதிகாரிகள் குழுவொன்று அடுத்த வாரம் கிளிநொச்சிக்குச் சென்று அங்கு அவசரமாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் என்று, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம்.ரசாக் தெரிவித்தார்.
இந்தப் பிரதேசங்களுக்கு மக்களை மீண்டும் வரவழைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்த அவர், வீதிகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலை வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.
இதேவேளை, வன்னியின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதுவரையில் 1,500 பேர் வவுனியாவை வந்தடைந்திருப்பதாகத் தெரிவித்த வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ், இவர்களில் பலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், 100 குடும்பங்கள் மனிக் பார்ம் பகுதியில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply