தெரிவுக்குழுவுக்கு முன்னோடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம்
நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்படவிருக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு சகல அரசியல் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களை முன்மொழியச் செய்வதற்கு ஏற்புடைய வகையில் தாம் விரைவில் சகல அரசியல் கட்சிகளின் கூட்டமொன்றை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பிரிவு பொறுப்பாளர்களை நேற்று காலையில் சந்தித்த போது தெரிவித்தார்.
அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது என்று சில ஊடகங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் சரியல்ல. சகல கட்சிகளும் இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சேர்ந்து கொண்டு, பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
13 பிளஸ் திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதை தாம் எதிர்க்கவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவுடன் தான் இந்தத் தடவை கூறியதை ஏற்கனவே புதுடில்லியில் நடந்த அரச தலைவர்கள் சந்திப்பிலும் அறிவித்திருந்தேன் என்று தெரிவித்த ஜனாதிபதி, இது ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல.
இந்நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினைக்கு விடை காணும் விடயத்தில் பங்காளிகளாக இருக்க வேண்டும். அதனால் தான் தமது அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு நல்ல முடிவை எடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது என்று கூறினார்.
13 பிளஸ் பற்றி நீங்கள் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நான் எனது நிலைப்பாட்டை இங்கு பகிரங்கப்படுத்தினால் அதை வைத்து பத்திரிகைகள் எனக்கு எதிராக எழுதி நாட்டில் பிரச்சினையை உருவாக்க எத்தணிக்கும் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
தொடர்ந்தும் அந்தக் கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் இது மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருவதனால் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு ஏகமனதான முடிவை எடுப்பது அவசியம். பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் தான் ஆதரித்து அமுலாக்குவேன் என்று கூறினார். இது விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். மக்களின் அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
மக்கள் விரும்பாத ஒரு தீர்வை ஏற்படுத்தி, நாம் அதனை அமுலாக்குவது முடியாத காரியம் என் றும் கூறினார். அரசாங்கம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை கொடுக்க தயக்கம் காட்டுவதனால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் உண்மை நிலை என்ன? என்று ஒரு ஆசிரியர் ஜனாதிபதி யிடம் கேட்டார்.
நிச்சயமாக நாங்கள் பொலிஸ் அதிகாரங் களை கொடுக்க முடியாது. அப்படி பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பென்தர பாலத்தைக் கடந்து தென் னிலங்கைக்கு போக முடியாத சூழ் நிலை உருவாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, காணி விடயத்தில் பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றதென்றும், அது பிரச்சினைக் குரிய விடயமல்ல என்றும் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் மொனராகலையில் பொதுமக்களுக்கு 10ஆயிரம் காணி உறுதிகளை பகிர்ந்த ளித்ததாகவும் அதுபோன்று காணிப் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துவிடலாம் என்றும் கூறினார்.
அரசாங்கத்தின் தலைவன் என்ற முறையில் அரசாங்கத்தினால் நடை முறைப் படுத்தக்கூடிய யதார்த்தபூர்வமான விடயங்களையே நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியுமே ஒழிய நடைமுறைப் படுத்த முடியாத சிக்கலான பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பற்றிய யோசனைகளை ஏற்றுக் கொள்வது சாத்தியமல்ல என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஊடகவியலாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்வதைப் பற்றி நான் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. ஊடகவியலாளர் கள் தேவையான விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
அநாவசியமான விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்கி றார்கள். இதனைத்தான் தவறு என்று நான் சொல்கிறேன். உள்நாட்டு பிரச்சி னையை சர்வதேச மயப்படுத்தி தேசத்திற்கு அபகீர்த்தியையும், பிரச்சினைகளை உண்டு பண்ணுவதையும் ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனம், 13 பிளஸ் சட்டத்திருத்தம் போன்ற விட யங்களில் ஊடகவியலாளர் நடுநிலையில் இருந்து பக்கச் சார்பற்ற முறையில் சரி பிழைகளை புரிந்து கொண்டு தங்கள் ஊடகங்களில் கருத்துக்களை எழுதினால் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலை களை உருவாக்க முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் தனது நிலைப்பாட்டில் இருந்தே பிரிவினைவாத கொள்கையை பின்னணியில் வைத்துக் கொண்டு, பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் ஆகியன அவசியம் என்று கேட்டு வருகின்ற போதிலும் வட பகுதியில் உள்ள மக்களும், இளைஞர்களும் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை. அவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி வசதி ஆகியனவே தேவையென்று எங்களிடம் கேட்கிறார்கள் என்றார்.
இந்நாட்டில் அமைதியும், சமாதானமும் நிலைத்திருக்க வேண்டும். 30 ஆண்டு காலம் யுத்தத்தை நடத்தி ஏற்பட்ட மனித மற்றும் சொத்துக்களின் அழிவு போதாதா? நாம் தொடர்ந்தும் யுத்தம் செய்து கொண்டிருக்க முடியாது. ஆகவே, எவ் விதமாயினும் இந்தப் பிரச்சினைக்கு இந்நாட்டு மக்கள் எல்லோரையும் பங்கு தாரர்களாக இணைத்துக் கொண்டு எல் லோரும் ஒன்று கூடி மக்களின் தேவை களுக்கு ஏற்புடைய வகையில் ஒரு சமா தானத் தீர்வை ஏற்படுத்த அரசாங்கம் விரும்புகிறது என்று கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசிய கூட்ட மைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி., ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற குழு ஆகிய அனனைத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இதுவரை தமது பெயர்களை முன்மொழியவில்லை. அந் தக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சேர்ந்து எல்லோருடைய பிரச்சினையாக விளங்கும் இனப்பிரச்சினை க்கு கூடி ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு முன்வர வேண்டுமென்று கூறினார்.
சில தமிழ்ப் பத்திரிகைகள் இனவாத கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன என்று கவலை தெரிவித்த ஜனாதிபதி, பத்திரிகைகள் தங்கள் கடமையை நடு நிலையுடன் சிந்தித்து செயற்படுத்துவது அவசியமென்று கூறினார்.
சிலர் அரசாங் கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக அரச எதிர்ப்பு துர்ப்பிரசாங்களை நாட்டிலும், உள்நாட்டிலும் ஏற்படுத்தி வருகிறார்கள். இது உண்மையில் நாட்டுக்கே தீங்கிழைக் கிறது. தேர்தல் காலத்தில் 6 மாதங்கள் இருந்தால், அரசாங்கத்தை நீங்கள் கவிழ் ப்பதற்கான பிரசாரங்களை செய்து அதில் வெற்றியும் காணலாம். அதைவிடுத்து இப்போது நாட்டுக்கு தீங்கிழைப்பது நல்லதல்ல என்று ஜனாதிபதி கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச சமூகத்தின் உதவியை நாடி இனப்பிரச்சி னைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு மூன்றாம் தரப்பின் அனுசரணை அவசியம் என்று வலியுறுத்தி இருக்கின்றது என்று கேட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, யார் வந்து தலையிட்டாலும் இந்தப் பிரச் சினையை என்னுடைய பதவிக்காலத்திலோ, ரணிலின் பதவிக்காலத்திலோ தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினையாக இருக்கிறதென்று ஜனாதிபதி கூறினார்.
எந்தவொரு தீர்வையும் மக்களின் விருப்பமின்றி நாம் செயற்படுத்த முடியா தென்றும் அவர் சொன்னார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த பின்னர் அக்குழு எடுக்கும் தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் பொறுப்பு என்ற குற்றச்சாட்டுகள் அதன் மீது சுமத்தப்படலாம் என்று அஞ்சியே அக்கட்சி பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வர தயக்கம் காட்டுவதாக ஒரு ஆசிரியர் கூறினார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அவை அனைத்தும் அவர்கள் எடுத்துரைக்கும் போலிக் காரணங்கள் என்று சுட்டிக்காட்டினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எல்.ரி.ரி.ஈ. நிபந்தனைகளை முன்வைத்தே முன்பு அரசாங்கத்தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதே போக்கில் நிபந்தனைகளை முன்வைக்காமல் அரசாங்கத்தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டுமென்று கூறினார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஹெல உறுமய கட்சியும், அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் 13 பிளஸ் குறித்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு குறித்தும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் இவ்விரு கட்சிகளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply