தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்துவதாக அமைய வேண்டும்: ஆயர் இராயப்பு யோசப்பு

தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை தமிழ் தேசிய அரசியலைப் பலப்படுத்துவதாக அமைய வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு இராயப்பு யோசப்பு ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் சிவில் சமூகத்தின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்றக் குழுத்தலைவர் இரா சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே பேரருட்திரு யோசப்பு ஆண்டகை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சமூகத்தினரால் டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பல விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிவில் சமூகத்தின் சார்பில் எழுதியுள்ள கடுதத்தில் பேரருட்திரு இராயப்பு யோசப்பு ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சிவில் சமூகத்தின் அறிக்கை தமிழ் அரசியல் சமகத்தினுள் தமிழரது அரசியல் எதிர்காலம் தொடர்பில் முக்கிய விவாதம் ஒன்றிற்கு வழிவகுத்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக அந்தக் கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனப்படுத்துவதற்கான ஒன்றல்ல என்றும் தமிழ்த் தேசியத்தினதும் அரசியலைப் பலப்படுத்துவதும் அதனூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திடப்படுத்துவதுமே அதன் நோக்கம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு காலத்திற்கு காலம் உரையாடி இருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆழ்ந்த யோசனையின் பின்னர் பகிரங்க வெளிப்படுத்தல ஒன்றை செய்ய தீர்மானித்ததாகவும் தமிழ் சிவில் சமூகத்தின் சார்பில் எழுதியுள்ள கடிதத்தில் மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு இராயப்பு யோசப்பு ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு அரசியல் உள்நோக்கமும் தமக்கு இல்லை என்பது சிவில் சமூகத்தின் அறிக்கை தேர்தலை முன்வைத்து முன்வைக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதில் இருந்து தெளிவாவதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே அரசாங்கத்துடன் பேசுவதற்கான மக்கள் ஆணையை தம்மகத்தே கொண்டவர்கள் என்பதால் தாம் பெற்ற ஆணையின் பால் அவர்கள் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை சொல்வது எவ்வாறு ஒற்றுமைக்கு குந்தகமாக அமையும் என்பதனை தம்மால் விளங்கிக் கொள்ளவில்லை என தமிழ் சிவில் சமூகத் தெரிவித்துள்ளது.

ஒற்றுமை என்ற வெற்றுக்கோஷத்தில் எந்தப் பலனும் இல்லை எனவும் தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்டுத்துவதாக அமைய வேண்டும் எனவும் தமிழ் சிவில் சமூகம் விலியுறுத்தியுள்ளது.

எந்த மக்களுக்காக அரசியல் செய்யப்படுகின்றதோ அந்த மக்களுடன் தொடர்ச்சியாக அரசியல் உரையாடல் ஒன்றை செய்யும் போதே அரசியல் உண்மையானதாகவும் மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவும் இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தம்மோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச முன்வந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டு தமிழ் சிவில் சமூகம் அந்த சந்திப்பு விரைவில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply