மனித உரிமைகள் ஆணையர் ஆனந்த மெண்டிஸ் இராஜினாமா

இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையர்களில் ஒருவராக இருந்த கலாநிதி ஆனந்த மெண்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பக்கச்சார்பற்ற விதத்தில், நியாயமான முறையில், அச்சமின்றி நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய நிலைமை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குள் இல்லை என்ற காரணத்தால் தான் இந்த தீர்மானத்திற்கு வர நேரிட்டதாக கலாநிதி ஆனந்த மெண்டிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

மூன்றாண்டு காலப் பதவியில் தன்னால் சுதந்திரமாகப் பணிகளை முன்னெடுக்கக்கூடிய சூழல் இல்லை என்பதை ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டு தான் அந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக கருதக்கூடாது, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கைத் திட்டங்களுக்குப் புறம்பாக அங்கு நடந்துவரும் சம்பவங்களே தனது தீர்மானத்துக்கு காரணம் என்பதையும் ஆனந்த மெண்டிஸ் பிபிசியிடம் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டினார்.

உலகில் மிகச் சிறந்த மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் தான் ஆணைக்குழுவில் இணைந்துகொண்டதாகவும் ஆனால் அந்த இலக்கை அடையமுடியாதபடி பல்வேறு இடையூறுகள் தனக்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆணைக்குழுவுக்குள் இருக்கும் தன்னால் பெயர் குறிப்பிட்டுக் கூற முடியாத நபர்களின் செயற்பாடுகளே தனது பணிகளுக்கு இடையூறாக இருந்ததாகவும் தனது இராஜினாமா ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக இருந்த கலாநிதி ஆனந்த மெண்டிஸ் பிபிசியிடம் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply