ஜனாதிபதி தலைமையில் 64ஆவது சுதந்திர தினம்
இலங்கையின் 64வது சுதந்திர தினம் இன்று மிகப்பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
‘ஆச்சரியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப் பொருளில் சுதந்திர தின பிரதான வைபவம் இம்முறை அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்தத்த ஜயந்தி மாவத்தை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பிரதான வைபவம் இன்று காலை 8.30 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
இதனை முன்னிட்டு அநுராதபுரம் பிரதேசம் உட்பட நாடு முழுவதிலும் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ள துடன் கோலாகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை அநுராதபுரம் உட்பட அதனை அண்மித்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பத்தாயிரத்திற்கும் அதிகமான பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் டி. எம். ஜயரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் திருமதி ஷிராணி பண்டாரநாயக்க, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ. ஜோன் செனவிரத்ன, வட மத்திய மாகாண ஆளுநர் கருணாரட்ன திவுல்கனே, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க உட்பட அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இது தவிர 200 வெளிநாட்டு தூதுவர்கள், பிரதிநிதிகள், 300 மதத் தலைவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் இரண்டாயிரம் பேர் உட்பட பலர் இதில் கலந்து கொள்வர். மேலும் பாதுகாப்புப் படைகளின் சார்பில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஹான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம், பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்கக்கோன், சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் உட்பட 270 பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சம்பிரதாய முறைப்படி இம்முறையும் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தேசிய இளைஞர் படையணியின் அணிவகுப்பு மரியாதைகள் இடம்பெறவுள்ளன.
இலங்கையின் புராதன வரலாற்று சிறப்பு மிக்க பிரதேசங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள இந்த சுதந்திர தின பிரதான வைபவத்தின் மரியாதை அணிவகுப்பில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 2700 பேர் பங்கு கொள்ளவுள்ளனர்.
1500 இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள், இலங்கை விமானப் படையைச் சேர்ந்த 320 வீரர்களும், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 350 வீரர்களும், பொலிஸ், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 250 வீரர்களும், சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 250 வீரங்களும் தேசிய இளைஞர் படையணியைச் சேர்ந்த 200 பேரும் இதில் அடங்குவர்.
இதேவேளை, அநுராதபுரம், பொலன்னறுவ, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சகல இனத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தும் 45 கலாசார குழுக்களைச் சேர்ந்த 2552 நடன மற்றும் நாட்டியக் கலைஞர்களும் பாடசாலை மாணவ, மாணவிகளும் பிரதான சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி அவர்களினதும் முக்கிய பிரமுகர்களினதும் வருகையைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு பிரதான நிகழ்வு ஆரம்பமாகும். முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபரினால் பிரதான மேடைக்கு அழைத்து வரப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 8.50 மணிக்கு மங்கள வாத்தியங்களுக்கு மத்தியில் தேசியக் கொடியை ஏற்றி இன்றைய சுதந்திர தின பிரதான நிகழ்வை ஆரம்பித்து வைப்பார். இதன் போது அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 11 பாடசாலைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சகல மதத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தும் பாடசாலை மாணவிகள் தேசிய கீதத்தை பாடவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவிகளினால் ஜயமங்கள கீதம் பாடப்படும். அதன் பின்னர் தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அத்துடன் ஜனாதிபதி அவர்களுக்கான விசேட மரியாதை வழங்கப்படவுள்ளதுடன் மரியாதை நிமித்தம் 21 பீரங்கி வேட்டுகளும் தீர்க்கப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்தத்த மாவத்தை வளாகத்திலிருந்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துவார். ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து மரியாதை அணிவகுப்பு ஆரம்பமாகும்.
இராணுவம்
பிரிகேடியர் கமகே தலைமையில் இராணுவ மரியாதை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. 1500 இராணுவ வீரர்கள் இதில் பங்கு கொள்ளவுள்ளனர். சகல படைப்பிரிவுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் இராணுவத்தின் கனரக, பீரங்கி வாகனங்கள், சமிக்ஞை பிரிவு வாகனங்களும் இந்த அணிவகுப்பில் செல்லவுள்ளன.
கடற்படை
கொமாண்டர் வை.ஆர். சேரசிங்க தலைமையில் கடற்படையின் மரியாதை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. 350 கடற்படை வீரர்கள் பங்கு கொள்ளவுள்ளனர். கொமடோர் லுகே தென்ன வாகன அணிக்கு தலைமை வகிக்கவுள்ளார்.
கடற்படையின் அதிவேக படகு பிரிவு, விசேட படகு பிரிவு, சுழியோடி பிரிவு, பொறியியல் விநியோக பிரிவு மற்றும் சமிக்ஞை பிரிவுகளைச் சேர்ந்த படை வீரர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
விமானப்படை
விங் கொமாண்டர் கீர்த்தி விண்ணிகம தலைமையில் விமானப் படையின் மரியாதை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. 320 விமானப் படை வீரர்கள் இவற்றில் அடங்குவர். விமானப் படைக்கு கிடைக்கப் பெற்ற ஜனாதிபதி வர்ண கொடிகளும் அணிவகுத்து செல்லவுள்ளது. எயார் கொமடோர் பதிரன வாகன அணிவகுப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
பொலிஸ்
பொலிஸ் மரியாதை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. 250 பொலிஸார் இதில் பங்கு கொள்ளவுள்ளதுடன் பொலிஸாரின் பாரம்பரிய உடையணிந்த இரண்டு பேண்ட் வாத்தியக் குழுக்களும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
எமது நாட்டில் மூன்று தசாப்தகாலமாக நிலவிய பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் மூன்றாவது சுதந்திர தினம் இதுவாகும். இம்முறை சுதந்திர தின வைபவத்தில் பெருந்தொகையான பொது மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply