குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழும் எமது விடுதலைக்கு வழி செய்யுங்கள்

இறுதி யுத்தத்தில் களத்தில் நின்று யுத்தம் செய்தவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டனர். யுத்தத்தில் ஆணை பிறப்பித்தோர் சுகபோகம் அனுபவிக்கின்றனர்.

ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாங்கள் பல வருடங்களாக குடும்ப உறவுகளைப் பிரிந்து சிறையில் வாடுகின்றோம். எமது விடுதலைக்கு வழி செய்யுங்கள்.

மகசின் சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சுமந்திரனிடம் நேற்று இவ்வாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர்.

கூட்டமைப்பு எம்.பி.என்.சுமந்திரன் நேற்று மாலை களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிட்டு அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். கைதிகளது வேண்டுகோள் குறித்து சுமந்திரன் எம்.பி கூறியதாவது,

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து தாம் ஏற்கனவே அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மூன்று வகையான கைதிகள் சிறையிலுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எதுவித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் முதற் பிரிவினர், நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்படும் வழக்குகளுடன் சம்பந்தப்பட்டோர் இரண்டாம் பிரிவினர் விசாரணை முடிவுற்று தண்டனையை அனுபவிப்பவர்கள் மூன்றாம் பிரிவினர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யும் படியும் தண்டனை அனுபவிப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் படியும் அரசுடனான பேச்சுவார்த்தையின் போது நாம் வலியுறுத்தினோம். இக் கைதிகள் தொடர்பாக கூட்டமைப்பு மீண்டும் அரசுடன் பேசும்.

இதேவேளை களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகளை மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு மாற்றும்படி சிறைச்சாலை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply