நாடு நகர திட்டமிடல் சட்டம் மூலம் மாகாண சபைகளின் அதிகாரம் பறிப்பு
இலங்கையில் நாடு நகர திட்டமிடல் கட்டளைச் சட்டமூலத்தில் அரசு கொண்டுவர முயற்சிக்கின்ற திருத்தங்கள் மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக உத்தரவாதப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பறிக்கும் செயல் என அந்நாட்டு எதிர்கட்சிகள் கண்டித்துள்ளன.
இந்தச்சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கு முன்னதாக மாகாண சபைகளின் கருத்தைப் பெறவேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், அதனை அனைத்து மாகாண சபைகளிலும் நிறைவேற்றும் நடவடிக்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை சுதந்திரக் கட்சி, மஹிந்த ராஜபக்ஷ, போர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இதன்படி, மேல்மாகாண சபையில் திங்கட்கிழமை இந்த சட்டவரைவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
சட்ட வரைவுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினர் வாக்களித்த அதேவேளை, எதிராக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மனோ கணேசன் தலைமை வகிக்கும் ஜனநாயக மக்கள் கட்சி உள்ளிட்ட எதிரணியினரும் வாக்களித்தனர்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல்?
இனப்பிரச்சனைக்குத் தீர்வாக அரசியலமைப்பின் 13ம் திருத்தப்படியான மாகாண சபை முறைக்கும் அப்பால் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் கூறிக்கொண்டு, அரசியலமைப்பின் படி இருக்கும் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூட பறித்துவிடும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மனோ கணேசன் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
குறித்தப் பிரதேசம் பாதுகாக்கப்பட்ட புனித பிரதேசம் அல்லது புத்த சாசனத்துக்குத் தேவையான பிரதேசம் என்று பௌத்த சாசன அமைச்சு கருதுமானால் அந்த நிலப்பகுதியை தமக்காக எடுத்துக்கொள்ளக் கூடிய அதிகாரத்தை இந்த சட்டம் அரசுக்கு வழங்குவதாக சுட்டிக்காட்டும் மனோ கணேசன், இது சிறுபான்மை மக்களின் உரிமைகளை மீறும் நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக இந்த அதிகாரத்தைப் பறித்துவிட வேண்டுமென்று அரசாங்கம் முயற்சிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனோ கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஆனால் நாட்டின் அபிவிருத்திக்காகவே இந்த சட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காகவே ஆதரவு வழங்கியதாகவும் மேல்மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரனதுங்க பிபிசியிடம் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply