நாணயக் கொள்கை மீளாய்வு – 2012 பெப்ரவரி: மத்திய வங்கி அறிக்கை
கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண்ணின் மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் (கொ.நு.வி.சு தளம் 2006/2007) தொடர்ந்தும் மிதமடைந்ததுடன், ஆண்டிற்கு ஆண்டுப் பணவீக்கம் 2011 டிசெம்பரின் 4.9% இலிருந்து 2012 ஜனவரியில் 3.8% க்கு வீழ்ச்சியடைந்தது.
இது பணவீக்கம் தனி ஒரு இலக்கத்திற்கு வீழ்ச்சியடைந்த 36ஆவது மாதமாகக் காணப்பட்டவேளையில் பெரும்பாலான காய்கறிவகைகள், உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் போன்ற உள்நாட்டு உணவுப் பொருட்களின் வழங்கலில் ஏற்பட்ட முன்னேற்றம் தாழ்ந்த பணவீக்கம் தொடர்ந்தும் காணப்பட பங்களித்திருந்ததுடன், உணவல்லா பணவீக்கம் இம் மாத காலத்தில் அதிகரிப்பினைக் காட்டியது. அதேவேளை, 2012 ஜனவரியில் ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம் மாற்றமெதுவுமின்றி முன்னைய மாதத்தின் 4.7% ஆகவே காணப்பட்டது.
அதிகரித்த உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கை, குறைந்த வட்டி வீதங்கள், உறுதியான செலாவணி வீதம், அதேபோன்று பன்னாட்டுச் சந்தையில் காணப்பட்ட எதிர்பார்க்கப்படாத உயர்ந்த வலு விலைகள் என்பனவற்றின் விளைவாக இறக்குமதி மீதான மொத்தச் செலவினம் 2011இன் முதல் பதினொரு மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 18.4 பில்லியனுக்கு கணிசமாக அதிகரித்தமையின் மூலம் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது.
இது இக் காலப்பகுதியில் ஏற்றுமதியிலிருந்தான வருவாய்கள் ஐ.அ.டொலர் 9.6 பில்லியனுக்கு 22.2% அதிகரித்தமைக்கிடையில் ஏற்பட்டதொன்றாகும். சுற்றுலாவிலிருந்தான அதிகரித்த வருவாய்கள், அதிகரித்த தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் பணிகள் கணக்கிற்கான ஏனைய உட்பாய்ச்சல்கள் என்பன நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையின் தாக்கத்தினைக் குறைக்க உதவியவேளையில் உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட நியாயமற்ற அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக தேறிய அடிப்படையில் வெளிநாட்டுச் செலாவணியினை நிரம்பல்
செய்வதன் மூலம் மத்திய வங்கி தலையிட வேண்டியிருந்தது. இதன் விளைவாக, வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் உட்பாய்ச்சல்களிலும் அரசிற்கான உட்பாய்ச்சல்களிலும் உயர்ந்த அதிகரிப்புக்கள் காணப்பட்டபோதும் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் (ஆசியத் தீர்ப்பனவு ஒன்றிய தேறிய மீதிகள் நீங்கலாக) 2011 நவம்பர் இறுதியில் ஐ.அ.டொலர் 5.9 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
அதேவேளை, 2011 டிசெம்பரில் வர்த்தக வங்கிகளினால் தனியார்துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 34.5 சதவீதத்தினால் அதிகரித்து, தனியார் துறைக்கு வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட கொடுகடனிற்குள் வர்த்தகத்துடன் தொடர்பான கொடுகடன் மற்றும் இறக்குமதியுடன் தொடர்பான தூண்டல்களினால் ஏற்பட்ட கொடுகடன்களும் கணிசமாக அதிகரித்திருக்கின்றமையினை தற்காலிகத் தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன. 2011ஆம் ஆண்டுப் பகுதியில் இறக்குமதி தொடர்பான கொடுகடன் 34 சதவீதத்திற்கும் கூடுதலாக அதிகரித்த வேளையில் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கான கொடுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பு ஏறத்தாள 8 சதவீதமாகக் காணப்பட்டது.
2011இல் அடகு பிடித்தலும் 69.5 சதவீதங் கொண்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைக் காட்டியது. மேலும், வர்த்தக வங்கிகளினால் அரச கூட்டுத்தாபனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் வழங்கப்பட்ட கொடுகடன்களும் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்ததுடன் குறிப்பாக அதிகரித்த பெற்றோலிய இறக்குமதிச் செலவுகளும் உள்நாட்டு விலைகளில் போதுமான சீராக்கங்கள் செய்யப்படாமையும் வர்த்தக வங்கிகளிடமிருந்தான பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கடன்பாடுகளை உயர்த்தின.
அதே வேளை, உள்நாட்டு நாணயச் சந்தையில் காணப்பட்ட மிகையான திரவத்தன்மை 2010இறுதியின் ரூ.124 பில்லியனிலிருந்து தற்போதைய மட்டமான 15 – 20 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்ததுடன் உள்நாட்டு நாணயச் சந்தையில் ஏற்பட்ட அத்தகைய வீழ்ச்சியின் காரணமாக சந்தை வட்டி வீதங்கள் அண்மைய மாதங்களில் சில மேல் நோக்கிய நகர்வுக்கு வழியமைத்தது. மிகையான திரட்சித் தன்மை வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக வர்த்தக வங்கிகள் வைப்புக்களின்மீது செலுத்தும் வட்டிவீதங்களை போட்டி ரீதியில் உயர்த்தியிருக்கின்றமையின் காரணமாக 3 மாத மற்றும் 6 மாத கால வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் அண்மைய ஒரு சில மாதங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைக் காட்டின.
இப் பேரண்டப் பொருளாதார நடவடிக்கைகளைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்டுவரும் கடன்களில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் அதிகரிப்பினை இரண்டு காரணங்களுக்காகக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கருதியது. முதலாவது, இறக்குமதியுடன் தொடர்பான கொடுகடனைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் வர்த்தகப் பற்றாக் குறையினையும் நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறையினையும் குறைத்தல்: இரண்டாவது 2011இல் கொடுகடன் பெருமளவிற்கு கட்டியெழுப்பப்பட்டிருப்பினும்கூட 2012இன் பின்னரைப்பகுதியில் பணவீக்கம் நடு ஒற்றை இலக்கத்தில் நிலை பெறுவதனை காத்திரமானமுறையில் உறுதிப்படுத்துவதாகும்.
இதற்கமைய நாணயச்சபை 2012 பெப்புருவரி 2ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் மீள் கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள் கொள்வன ஒவ்வொன்றினையும் 50 அடிப்படைப் புள்ளிகளினால் அதிகரி;ப்பதெனத் தீர்;மானித்தது. எனவே மத்திய வங்கியின் மீள் கொள்வனவு வீதமும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் முறையே 7.50 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் விளங்கும்.
நாணயச்சபையானது வர்த்தக வங்கிகள் அவற்றின் கொடுகடன் பகிர்ந்தளிப்பினை 2012இல் ஒட்டுமொத்தக் கொடுகடன் வளர்ச்சியை, 2011 இறுதியில் அவர்களது கடன் ஏட்டில் வெளிநின்ற தொகையில் 18 சதவீதத்தினை விஞ்சாதிருக்கும் வகையிலும் அதேவேளையில் அவ் வங்கிகளுக்கான கொடுகடன் வளர்ச்சியை 23 சதவீதம் வரையில் மிதமாக்குவதற்கு அனுமதியளிப்பதற்கும் தீர்மானித்தது.
கொடுகடன் வளர்ச்சியின் 5 சதவீதம் வரையிலான மிகை வெளிநாட்டிலிருந்து திரட்டப்பட்ட நிதியிலிருந்து நிதியிடப்படும். மேலும் மத்திய வங்கி, வழிகாட்டல்: 2012இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல்துறைக் கொள்கைகள்’ என்பதில் ஏற்படுத்தப்பட்டவாறான உட்பாய்ச்சல்களுக்கான இலக்குகளை கிரமமான அடிப்படையில் கண்காணிக்கும். வெளிநாட்டு நேரடி முதலீடுகள், சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள், தொழிலாளர் பண அனுப்பல்கள், வங்கிகளின் அடுக்கு 2 மூலதனம், பங்கு சந்தைகளுக்கான உட்பாய்ச்சல் அரச பிணையங்கள் சந்தைக்கான உட்பாய்ச்சல்கள், மற்றும் பெற்றோலிய இறக்குமதிகளுக்கான தொடர் கொடுகடன்கள் என்பனவற்றைப் பொறுத்தவரை இவை நாட்டிற்கான தேறிய வெளிநாட்டு செலாவணி உட்பாய்ச்சல்கள் அதிகரிக்க உதவியதன் மூலம், 2012இல் சென்மதி நிலுவை 2012 இல் ஆரோக்கியமான மிகையினைப் பதிவு செய்வதனையும் இயலச் செய்யும். மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைக்கு செய்யப்பட்ட சீர்திருத்தங்களும் தொடர்பான அரசாங்க அதிகார சபைகளினால் பின்பற்றப்படவுள்ள ஏனைய வழிமுறைகளும் இலங்கை மத்திய வங்கி தேறிய அடிப்படையில் சந்தைக்கு வெளிநாட்டுச் செலாவணியினை நிரம்பல் செய்வதற்கான தேவையினை 2012இல் பெருமளவிற்குக் குறைத்துவிடும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply