சீனாவுடன் கைகோர்க்கும் பாகிஸ்தான்
சீனாவுடனான உறவை பலப்படுத்த பாகிஸ்தான் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியை சீனாவுக்கு குத்தகைக்குவிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இப்பகுதியை 50 ஆண்டுகளுக்கு சீனாவுக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் அந்த நாட்டுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.
இத்தகவலை வாஷிங்டனில் உள்ள அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களது கருத்துகள் உள்ளூர் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கமான உறவை தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை. அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பு வழக்கில் பிரதான குற்றவாளியான சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பதுங்கியிருந்தது பாகிஸ்தான் மீது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அளிக்கும் உதவிகளை நிறுத்தும்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கான ரூ. 2,000 கோடி உதவியை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
இது தவிர பாகிஸ்தான் எல்லையில் இருந்த இராணுவ வீரர்கள் மீது அமெரிக்க விமானம் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். இது தற்செயலாக நடந்த தவறு என்றும், திட்டமிட்டு இத்தாக்குதல் நடத்தப்படவில்லை என்று அமெரிக்கா கூறியபோதிலும், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் சமாதானமடையவில்லை. இச்சம்பவம் இரு நாடுகளிடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.
அமெரிக்க வல்லரசுக்கு மாற்றாக சீனாவுடன் கை கோர்த்து செயல்பட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக ஆய்வாளர்கள் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சீனாவில் பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது கில்ஜித்-பால்திஸ்தான் பகுதியை சீனாவுக்குக் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஜனவரி 4ம் திகதி முதல் 8ம் திகதி வரை சீனாவில் இருந்தபோது பிரதமர் வென் ஜியாபோவுடன் கயானி பேச்சு நடத்தினார்.
அப்போது சீன மக்கள் இராணுவம், பாகிஸ்தானுக்குத் தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் செய்யும் என்று வென் ஜியாபோ தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாட்டு இராணுவமும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் அப்போது ஒப்புக் கொள்ளப்பட்டது.
“அமெரிக்காவுடன் தேய்ந்து வரும் பாகிஸ்தானின் உறவு, சீனாவுடன் கைகோர்க்க புதிய உத்தி” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் 50 ஆண்டுகளுக்கு நிலத்தை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளதாக ரோஸ்னமாக பாங்-இ-ஷார் எனும் உருது நாளேடு செய்தி வெளியிட்டதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
பாகிஸ்தானின் இந்த முடிவை சீன அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டு சம்மதித்துள்ளனர். முதல் கட்டமாக கில்ஜிஸ்தான் பகுதியில் சீன அரசு சில மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும். பிறகு படிப்படியாக இப்பகுதியை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும்.
உருது நாளேட்டில் வெளியான செய்தியின்படி இரு நாட்டு இராணுவமும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரு நாட்டு இராணுவ வீரர்களும் இணைந்து செயல்படும் இராணுவ ஒத்திகை இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அமெரிக்க நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply