அந்தோனி சகாயம் மீதான தாக்குதலுக்கு வன்மையான கண்டனம்
மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் என்பவருடைய வீட்டினுள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அத்துமீறி நுழைந்து அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீது கண்மூடித்தனமான முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கலான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிய வருகையில்;
கடந்த வருடம் இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மன்னார் பிரதேச சபையின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் அந்தோனி சகாயம்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட குறித்த உப தலைவர் மக்களுக்காக சேவையாற்றி வருகின்றார்.தன்னலம், சுயநலம் இன்றி மன்னார் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மக்களின் சகல விதமான பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பல வகையிலும் இரவு,பகல் பாராது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
தனது சபை சார்ந்த பகுதிகளில் இடம் பெற்று வருகின்ற சட்டவிரோதச் செயல்களை நிறுத்த பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். அதன் விளைவாகவே அவரையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்த அல்லது கொலை செய்ய மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
-இத்தாக்குதல் சம்பவத்தின் போது அவரது மனைவி கூட கடுமையாகத் தாககப்பட்டுள்ளார். பெண் மீது கருணை காட்டாது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் உள்ளமை தெரிய வருகின்றது.
இந்த தாக்குதலை மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் வன்மையாகக் கண்டிப்பதோடு இத்தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக கண்டனத் தீர்மானத்தினை றிறைவேற்றவுள்ளோம்.
எனவே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply