ஜனாதிபதிக்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் பெரு வரவேற்பு
சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு சிங்கப்பூர் செங்கீ விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஜனாதிபதி கலாநிதி டோனி டென் கெங் யேம் அவர்களின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதுடன் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச் சாத்திடவுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் முதல் பெண் மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுணுகம ஆகியோர் மேற்படி தூதுக் குழுவில் இடம்பெறுகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான மேற்படி தூதுக்குழுவினரை சிங்கப்பூர் செங்கீ விமான நிலையத்தில் அந்நாட்டின் வர்த்தக கைத்தொழில் மற்றும் உள்நாட்டலுவல்கள் சிரேஷ்ட அமைச்சர் எஸ். ஈஸ்வரன், சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திருமதி பேரியல் அஷ்ரப், இலங்கைக்கான சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் சேங் வெய் டுங்ங் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை யிலான தூதுக்குழுவினர் நேற்றைய தினம் பிற்பகல் சிங்கப்பூர் நேரம் 4.35 மணிக்கு அந்நாட்டைச் சென்றடைந்தனர்.
சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்றைய தினம் அந்நாட்டின் ஜனாதிபதி கலாநிதி டோனி டென் கெங் யேம், பிரதமர் லீஷியன் லூங் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இப்பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்குமிடையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு நேற்று தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply