மரியா ஒடேரோ கொழும்பிலிருந்து புதுடில்லிக்கு பயணம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் மரியா ஒடேரோ தனது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு சென்றுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி முதல் இலங்கையில் தங்கியிருந்த ஒடேரோ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தி மதிப்பீடுகளை மேற்கொண்டதன் பின்னரே அடுத்த கட்ட விஜயமாக இந்தியா சென்றுள்ளார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக்குடனேயே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த மரியா ஒடேரோ, இதன்போது ஆட்கடத்தல், சமாதானம், பதிலளிக்கும் கடப்பாடு, நல்லிணக்க நடவடிக்கைகள், கல்வி மற்றும் இளைஞர் நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றி அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தியிருந்தார்.
எனினும், இவர்கள் இருவரும் தங்களது இலங்கை விஜயத்தின் இறுதியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும், ஆதலால் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் கூட்டாக அறிவித்திருந்தனர்.
எனினும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியா செல்வாக்கு செலுத்தக்கூடிய கருவியாக இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதாவது மனித உரிமைகள் பேரவையில் இந்தியா, இலங்கைக்கு ஆதரவான முன்னெடுப்புகளை மேற்கொண்டால் அதன் மூலம் இலங்கை தனக்குச் சாதகமான நிலைமைகளை அங்கு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலைமையிலேயே அமெரிக்க சிரேஷ்ட இராஜதந்திரியான மரியா ஒட்டேரோ இலங்கை வந்து நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்டமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இது மரியா ஒடேரோவின் தெற்காசிய விஜயம் என்று கூறினாலும் அவர் புதுடில்லியில் இலங்கை நிலைவரம் பற்றி கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இரு நாட்களுக்கு இந்தியாவில் தங்கியிருக்கும் மரியா ஒட்டேரோ அந்நாட்டு அரசியல் பிரமுகர்கள் உட்பட பல தரப்பினரையும் சந்திக்கிறார்.
இதன்போது இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்கா சார்பான தமது மதிப்பீடுகளையும் அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா எடுக்கப்போகும் நிலைப்பாடு, அதற்கான அடிப்படைக் காரணங்கள் போன்ற விடயங்கள் பற்றியும் அவர் இந்தியாவுக்கு எடுத்துரைத்து விளக்கமளிப்பார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply