தோல்வியை நோக்கிய பயணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தி வந்த பேச்சுக்கள் முடங்கிப் போயுள்ள நிலையில், தெரிவுக்குழுவுக்குள் கூட்டமைப்பை இழுப்பதற்கான அரசதரப்பு நகர்வுகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்குள் வந்தால் தான் இனிமேல் அவர்களுடன் பேச்சுக்களை நடத்த முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ள நிலையில் அடுத்த கட்டப்பேச்சுகள் எப்போது என்று யாருமே கேள்வி கேட்பதும் இல்லை. பதில் கொடுப்பதும் இல்லை.
இந்தக் கட்டத்தில் கடந்த வாரம் ஐதேகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தியிருக்கிறது.
இதன்போது கூட்டமைப்பு அங்கம் வகிக்காத தெரிவுக்குழுவில் தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை என்று ஐதேக கூறியுள்ளது. அதுமட்டுமன்றி நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்தும் அரசாங்கத்துக்கு வெறுப்பைக் கொடுத்துள்ளது.
இதன் காரணமாக அரசு மீதான நெருக்கடிகள் மேலும் வலுவடைந்த சூழலில் தான் அமெரிக்க இராஜதந்திரிகள் அடுத்தடுத்து வந்து அரசாங்கத் தரப்புக்கு எரிச்சலூட்டியுள்ளனர்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பு அரசாங்கத்தின் மீது இயல்பாகவே சுமத்தப்பட்டது. ஆனால், அரசாங்கமோ பிடிகொடுக்காமல் நழுவி, அந்தப் பொறுப்பை தனது தலையில் இருந்து இறக்கி விட்டு அடுத்தவரைச் சுமக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டது.
அதற்காகவே தெரிவுக் குழுவையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.ஆனால், இப்போது அரசியல் பேச்சுக்களும் இல்லை, தெரிவுக்குழுவும் இல்லை. ஐதேகவும் கூட்டமைப்பும் பங்கேற்காத ஒரு தெரிவுக்குழுவை அரசாங்கத்தால் அமைக்க முடியாது.
அப்படி அமைத்தால்கூட அது அரசதரப்புக் குழுவாகவே இருக்கும். அந்தக் குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் ஒன்று தான் அரசாங்கமே தீர்வை அறிவிப்பதும் ஒன்று தான்.
இதில் எந்தத் தரப்பின் ஊடாக அரசியல்தீர்வு முன்வைக்கப்பட்டாலும் அது அரதரப்புக்கு சிக்கலானதொன்றாகவே அமையும்.
இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு மாகாணங்களுக்கு பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்து வருவதற்கு காரணம் அரசியல் நோக்கம் தான்.
தமிழர்களுக்கு நியாயமான அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்தால் அவர்கள் பிரிந்து போய் விடுவார்கள் என்று கூறுவதெல்லாம் வெட்டியான நியாயங்களே தவிர உண்மையானவை அல்ல.
இதற்காகவே போரின் முடிவில் அழிந்து போனதாக அறிவித்த புலிகள் இயக்கத்தை அரசாங்கமே மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.
இலங்கையில் பிரிவினைவாதம் இனித் தோன்றாது என்று அடித்துக் கூறிய அரசாங்கம், இப்போது பிரிவினைவாதிகள் நாட்டைப் பிரிக்க முனைவதாக பிரசாரம் செய்கிறது.
நடைமுறையில் இப்போது பிரிவினை கோரிப் போராடும் நிலையில் தமிழர்கள் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனாலும் அரசாங்கம் அதிகாரப்பகிர்வை நிராகரிப்பதற்காக பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்க முனைகிறது.
பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால் மாலைதீவில் ஏற்பட்ட நிலை தான் இங்கும் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் சட்டத்தரணி கோமின் தயாசிறி. மாலைதீவில் ஏற்பட்ட பிரச்சினைக்கும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்வதற்கும் துளியளவும் தொடர்பில்லை.
அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பது ஆயுதக்கிளர்ச்சிக்கு வழிவிடும் என்ற கருத்தை சிங்களத் தேசியவாதிகள் இப்போது தீவிரமாக பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்க மறுப்பதே அத்தகைய பிரச்சினைக்கு வழிகோலும் என்பதை அரசாங்கம் உணரவில்லை.
இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான அரிய சந்தர்ப்பத்தை அரசாங்கம் தொலைத்து விட்டது- தொலைத்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் இதுபோன்ற பெரும்பான்மை பலத்துடனும் அதிகாரபலத்துடனும் முன் எவரும் ஆட்சியில் இருக்கவும் இல்லை. இன்னொரு முறை ஆட்சிக்கு வரமுடியும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
ஆனால் இந்தப் பெரும்பான்மை பலத்தை கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கவில்லை. அரசியல் நலன்கள் பாதிக்கப்பட்டு விடலாம் என்ற அச்சமே இதற்குக் காரணம்.
உள்நாட்டில் அரசியல் நலனை முன்னிறுத்தி அரசாங்கம் செயற்படத் தொடங்கியதன் விளைவாக – சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் விளைவு தான் அமெரிக்கா இப்போது இலங்கைக்கு எதிராக எடுத்துள்ள முடிவு.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஜெனீவாவில் கொண்டு வரும் முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அதைவிடஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அரசியல் பேச்சுக்கள் விடயத்தில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டைக் கூட ஆதரிக்கும் நிலையில் அமெரிக்கா இப்போது இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்களின் மூலம் எட்டப்படும் இணக்கப்பாடு தெரிவுக்குழுவுக்கான விவாதப் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் குறித்து அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிர்மாறானது.
முன்னர் அரசாங்கத்தின் பக்கம் நின்ற அமெரிக்கா இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் மாறி நிற்கிறது. இப்போதெல்லாம் கொழும்பு வரும் அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரிகள்இ முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தான் சந்திக்கிறார்கள்.
அதன் பின்னர் தான் அரசதரப்புடன் பேசுகிறார்கள். இதுவும் கூட அரசாங்கத்துக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசதரப்புடன் முதலில் பேசாமல் கூட்டமைப்புடன் பேசுவது இராஜதந்திர வழிமுறைகளுக்கு முரணானது என்றும் இலங்கை அரசு கருதுகிறது. முன்னரெல்லாம் இப்படியான நிலை இருந்ததில்லை. சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் இவை.
இதற்குக் காரணம் போர் முடிந்த 33 மாதங்களில் அரசாங்கத்தினால் செய்ய முடியாமல் போன விடயங்கள் தான். போர் நடந்த காலத்தில் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றிருந்த அரசாங்கம், போர் முடிந்த பின்னர் அவற்றைத் தக்க வைப்பதில் தோல்வி கண்டு விட்டது.
போரில் கிடைத்த வெற்றியைக் கொண்டும், அதையடுத்து தேர்தல்களில் கிடைத்த மாபெரும் வெற்றிகளைக் கொண்டும் அரசாங்கம் போட்ட கணக்கு தப்பாகி விட்டது.
இலங்கையில் நீடித்த அமைதியை உருவாக்க விரும்பும் சர்வதேச சமூகம் அதை அரசாங்கத்தின் மூலம் செய்யவே விரும்புகிறது. ஆனால், அரசாங்கமோ அதற்குப் பிடிகொடுக்காமல் நழுவப் பார்க்கிறது. இதன் விளைவாகத் தான் சர்வதேச அரங்கில் – ஜெனிவா கூட்டத்தொடரில் கண்டனத் தீர்மானம் ஒன்றுக்கு முகம் கொடுக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இப்போது கூட, சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்க அரசுக்கு வழிகள் உள்ளன. ஆனால் அந்த வழிகளை தெரிவு செய்வதானால், அரசியல் நலன்களைத் துறந்து விட்டுத்தான் பயணிக்க வேண்டும். அதனைச் செய்ய அரசாங்கம் இன்னமும் தயாராகவில்லை. இதேநிலை தொடருமானால் ரொபர்ட் ஓ பிளேக் எச்சரித்துள்ளது போன்று, சர்வதேசம் தலையிடும் நிலை ஏற்படலாம்.
: கே.சஞ்சயன் (தமிழ்மிரர்)
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply