பொய் குற்றச்சாட்டுகளை கண்டித்து நாடெங்கும் எதிர்ப்புப் பேரணி

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டுக்கு எதிரான சர்வதேச சக்திகளுக்கு நாட்டு மக்களின் பலத்தை காண்பிக்கும் பொருட்டும் மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.

ஜெனீவாவில் எதிர்வரும் 27ம் திகதி மேற்படி கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் அதே தினத்தன்று கொழும்பு நகரை பிரதானமாகக் கொண்டு நாடு முழுவதிலும் இந்த மாபெரும் பேரணி ஒரே நேரத்தில் நடாத்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், பெற்றோலிய வளத்துறை அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

சகல அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் பூரண ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ள இந்த மக்கள் பேரணியில் இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல தரப்பினரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் தலைவர்கள் நேற்று உடனடியாக கூடி மேற்கொண்ட தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இந்த விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான விமல் வீரவங்ச, சம்பிக ரணவக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த இங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஜெனீவாவில் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இலங்கைக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன. கடந்த காலங்களில் இது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது, அந்த சவால்களுக்கு நாங்கள் மிகவும் தைரியமான முறையில் முகம் கொடுத்தோம்.

சிலரது தூண்டுதல்களின் விலைவாக அவ்வப்போது நாட்டுக்கும், அரசுக்கும் எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அன்றும், இன்றும், என்றும் இதுபோன்ற பல அழுத்தங்கள் வந்தவண்ணம் உள்ளன. இது போன்ற சகல சந்தர்ப்பங்களிலும் நாங்கள் அந்த சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளோம்.

30 வருட காலம் இந்த நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதத்தை முறியடிக்கும் செயற்பாட்டுக்கு நாட்டிலுள்ள சகல மக்களினதும் ஆதரவுசகள் இன, மத பேதங்களுக்கு அப்பால் கிடைத்தது. எமது செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தியமையினாலேயே அந்த ஆதரவை மக்கள் எமக்குத் தந்தனர்.

அதன் ஒரு அங்கமாகவே எதிர்வரும் 27ம் திகதி பல்லாயிரக் கணக்கான மக்களை ஒரே இடத்தில் ஒன்று திரட்டி எமது பலத்தை சர்வதேச சத்திகளுக்கு எதிர்ப்பையும் காண்பிக்கவுள்ளோம்.

இந்தக் கூட்டம் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படுத்தாத வகையிலும் அமைதியான முறையில் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளதுடன் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

உள்ளூர் அரசியல் நிலைமைகளில் எமக்குள் எந்தவகையிலான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பரவாயில்லை. அவற்றை நாம் எமது மட்டத்தில் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் சர்வதேச அழுத்தங்கள் வரும் பட்சத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது பலத்தை காண்பிப்பதுடன், எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச அழுத்தங்களின் பின்னணியில் சிலர் செயற்படுவதாக தெரிவித்த அவர் இது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கும் பெரிதும் சந்தோசத்தை அளிப்பதாகவும் குறிப்பிட்டார். இலங்கைக்கு எதிராக பலதடவைகள் இது போன்ற குற்றச்சாட்டு கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவைகள் அனைத்தையும் நாம் வெற்றி கொண்டது போன்று இம்முறையும் நாம் வெற்றிப் பெறுவது உறுதி அதே நிலைப்பாட்டிலேயே நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பில் நாம் பல நாடுகளுடன் எமது ராஜதந்திர மட்டத்தில் தொடர்பு கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

வெளிநாடுகளுடன் நாம் முன்னெடுத்த சகல நடவடிக்கைகளும் எமக்கு இதுவரை பெரு வெற்றியைத் தந்துள்ளன.

அதிகமான நாடுகள் எம்முடன் இருப்பதுடன், ஆதரவுகளையும் தரவுள்ளனர் என்றார். அரசுடன் இணைந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளும் பதிவு செய்யப்பட்ட 18 அரசியல் கட்சிகளும் இணைந்தே இந்த பேரணியை நடத்தவுள்ன என்றும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply