தமிழரின் பிரச்சினையில் இந்திய அரசின் தலையீடு போதாது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தமிழ்நாடு மாநில மாநாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்திய அரசு, இலங்கையை வலியுறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம் மாநாட்டில் இலங்கை தொடர்பில் மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவையாவன,

இலங்கையில் யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் ஆகின்றன. ஆயுத மோதல் முடிந்தவுடன் இலங்கைத தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதி அமுலாகவில்லை. இலங்கைத் தமிழர்களின் துயரம் இன்னும் தொடர்கிறது.

சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழ்விடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெறுகிறது.

அவர்களின் புனர் வாழ்விற்கான மீள் குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் போதுமான அளவு நடைபெறவில்லை. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்களை குடியமர்த்திட இலங்கை அரசு முயற்சிக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் ஆயுத மோதல் காலத்திலும், அதற்கு முன்பும் கைது செய்யப்பட்டு, இன்றைக்கும் சிறையில் இருக்கக் கூடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் தமிழர்கள் வாழக் கூடிய பகுதிகளில் இன்றும் இராணுவ நிர்வாகம் தொடர்கிறது. உடனடியாக இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டு சிவில் நிர்வாகம் கொண்டு வரப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பேச்சுவார்த்தை நடைபெறுகிற போதே இலங்கை அரசு இந்தப் பிரச்சனையை பாராளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு விடுவது என்று முடிவு செய்திருக்கிறது.

இலங்கை அரசின் இம்முடிவு பிரச்சனைக்கு தீர்வு காண உதவாது. இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, நிலம், காவல்துறை உள்ளிட்ட மாநில சுயாட்சி அந்தளிதுடன் கூடிய அதிகாரங்களை வழங்குவதற்கும், இலங்கையில் தமிழ் மொழி, தமிழர்களுக்கு சம வாய்ப்பு, சம உரிமைகளுடனான பாதுகாப்பு ஆகியவற்றை காக்கும் விதத்திலும், சட்டத் திருத்தம் செய்திட இலங்கை அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க இந்திய அரசின் தலையீடு போதுமானதாக இல்லை. எனவே, இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணவும், போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு நிவாரணங்கள் கிடைத்திடவும், மீள் குடியேற்றம் துரிதமாக நடைபெறவும், இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென கட்சியின் 20வது மாநில மாநாடு இந்திய அரசை வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply