மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு எதிராக தொடர் போராடங்கள்
ஜெனீவாவில் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உச்சிமாநாட்டில் மேற்கத்தேய நாடுகள் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு, அதனை செயற்படுத்துவது அவசியம் என்று இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்கும் என்று அரசாங்கத்திற்கு இப்போது நம்பகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
மகாசங்கத்தினர், சுதேச வைத்தியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள் மற்றும் தேசத்தைக் காக்கும் இராணுவவீரர்கள் ஆகியோரின் சாதனையின் மூலமே இலங்கை மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யுத்தத்தில் நாடு அடைந்த வெற்றியை இழிவுபடுத்தும் முகமாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளும் அழுத்தங்களுக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் இப்போது தீர்மானித்துள்ளார்கள். எங்களுக்கிடையில் எந்தவொரு கருத்து மோதல்களோ, பகைமை உணர்வுகளோ இல்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்டும் முகமாக மக்கள் இம்மாதம் 27, 28ம் திகதிகளிலும் மார்ச் மாதம் முதலாம், இரண்டாம் திகதிகளிலும் கொழும்பு மாநகரம் உட்பட நாட்டின் சகல பிரதான நகரங்களிலும், பாராளுமன்ற தொகுதியிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை. அதற்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்துவதற்காகவே நல்லிணக்க ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு வெளிநாடுகளில் இருந்து ஒரு தீர்வை ஏற்படுத்த எத்தனிப்பது எவ்விதத்திலும் பயனளிக்காது. இந்தப் பிரச்சினைக்கு இந்நாட்டு மக்களே பரஸ்பரம் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் அதுவே ஒரு நிரந்தர அரசியல் தீர்வாக இருக்கும். இந்த பிரச்சினைக்கு உள்ளூரில் இருந்து தீர்வு ஒன்று ஏற்படுத்த வேண்டுமென்று பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவிற்கு சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க, நீர்ப்பாசன மற்றும் நீர்வள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கூட்டாகவும் தனித்தனியாகவும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் தூதுக்குழுவினரை நேரில் சந்தித்து இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தற்போது இடம்பெற்று வரும் அபிவிருத்தி பணிகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்துதல் போன்ற பல்வேறு பணிகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ளமையை ஆதாரபூர்வமாக விளக்கிவருவதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஜெனீவாவில் இருந்து எங்களுக்கு அறிவித்தார்.
இலங்கை தூதுக்குழுவினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவனீதம்பிள்ளையையும் சந்தித்து, இப்போது எந்தளவிற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகள் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் அவரது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இலங்கை அரசாங்கம் டிசம்பர் மாதம் 17ம் திகதியன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர், அடுத்த இரு மாத காலத்தில் ஆணைக்குழுவின் சிபாரிசுகள் பலவற்றை ஏற்கனவே வெற்றிகரமான முறையில் அமுலாக்கியிருப்பதாக இலங்கை குழுவினர் மனித உரிமை ஆணையாளருக்கு எடுத்துக் காட்டினர்.
பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இது பற்றி தகவல் தருகையில், இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும் எண்ணத்துடன் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை கூட்டி, அதில் இந்நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் பங்கு கொண்டு ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதற்கு வாய்ப்பை அளிப்பதற்கு தயாராக இருக்கின்ற போதிலும், அதனை சாத்தியப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பது குறித்தும் வேதனை தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் இன்று நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன் அரசாங்கமும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து நாட்டை வளப்படுத்துவதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு இவ்விதம் மேற்கத்தேய நாடுகள் எல்.ரி.ரி.ஈ க்கு பக்கச்சார்பாக இருந்து, இலங்கை மீது அழுத்தங்களை கொண்டு வருவது நியாயமல்ல என்றும், இத்தகைய முயற்சிகள் இலங்கையின் அபிவிருத்தி பாதைக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதென்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டி யுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதத்தில் யுனிவர்சல் பீரியோடிக் றிவிவ் (UPR) சர்வதேச ரீதியில் ஒரு கட்டத்தில் மேற்கொள்ளும் மீளாய்வு நடத்தப்படுவதுண்டு.
அந்த மீளாய்வை இலங்கை நடத்துவதற்கு முன்னர் இவ்விதம் அவசரப்பட்டு, இப்போதைக்கு மனித உரிமை ஆணைக்குழு இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகள் நியாயமற்றவை என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனுடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை செயல்படுத்துவதற்கான காலத்தை நிர்ணயித்து அதனை அறிவிக்க வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தை மேற்கு நாடுகள் கேட்டுக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச ரீதியில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்த மேற்கு நாடுகள் ஜெனீவா உச்சிமாநாட்டில் இலங்கை தூதுக்குழுவினருக்கு அழுத்தங்களை வழங்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply