புதிய வியூகம் அமைக்கும் வெளிவிவகார அமைச்சு
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கும் நிலையில், இவ்விவகாரத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் எடுத்துக் கொள்ளப்படுவதை தான் விரும்புவதாக இலங்கை அரசு புதிய வியூகத்தை எடுத்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் இதை ஆராய்வதென்றால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு கூடுதலான காலஅவகாசம் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இத்தீர்மானம் கொண்டுவரப்படும் தருணம் குறித்து அரசாங்கம் பிரதானமாக கவலையடைவதாக அமைச்சர் தெரிவித்தார் .
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை டிசெம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து ஜனவரி 25 ஆம் திகதி தனக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் பீரிஸ் கூறினார்.
இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கூறுகையில், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் கல்வி, வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்குமான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த 300,000 பேரில் தற்போது 5,000 பேர் மாத்திரமே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய சம்பவங்களை சட்டமா அதிபர் இனங்காண்பார் என அமைச்சர் கூறினார்.
காணி விவகாரம் குறித்து அவர் கூறுகையில், காணிகளின் சட்டரீதியான உரிமையாளர்கள் அக்காணிகளை பயன்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்திருந்தாகவும் யுத்தத்தின் பின்னர் காணிகள் தொடர்பாக சிக்கலான உரிமைக் கோரல்கள் உள்ளதாகவும் கூறினார். காணியற்ற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும்போது மேற்படி விடயங்களுக்குத் தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply