தேசியமும் சுயநிர்ணய உரிமையும் வெற்றுக் கோஷங்களுமல்ல; ஒரு சிலரின் குத்தகைக் கோஷங்களுமல்ல: வி.ரி.தமிழ்மாறன்

கடந்த 18 ஆந் தேதி வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்ச் சிவில் சமூகத்துக்கும் இடையிலான சந்திப்பில் நானும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்திருந்தேன். கலந்துரையாடலின்போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

கூட்ட முடிவில் அவர்களுக்கு விசேடமான சந்திப்பொன்று வழங்கப்படும் என்று கூறப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கலந்துரையாடலில் பேசப்பட்டவை மனம்போன போக்கில் ஊடகங்களில், குறிப்பாக இணையத் தளங்களில் பிரசுரமாகியுள்ளன.

யார் இப்படித் தகவல் வழங்கியிருப்பார்கள் என்பதற்கு அதிக ‘விஞ்ஞான ஆராய்ச்சி’ தேவைப்படாது. ஏனெனில் சம்பந்தப்பட்டவர்கள் எனக்குப் ‘பக்கத்திலேயே’ அமர்ந்திருந்தார்கள். பதினைந்து வயதிலிருந்தே ஊடகவியலாளனாகச் செயற்பட்டவன் என்ற அளவிலும் மனித உரிமைகள் ஆசிரியனாக இருப்பவன் என்றளவிலும் கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. இதில் ஒளிவு மறைவும் தேவைப்படாது. ஆனால் ‘உள்ளிருந்தோர்’ கருத்துக்களைச் சரியாக உள்வாங்கினார்களா என்பதே எனது பிரச்சனையாகும்.

இங்கே நான் குறிப்பிட விழைவதைத் தன்னிலை விளக்கமாக மட்டுமன்றிக் கருத்தியல் விளக்கமாகவும் வாசகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அக்கலந்துரையாடலில் நான் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக இரண்டு தவறான கற்பிதங்களைச் சம்பந்தப்பட்டோர் சிலர் இணையத்தளங்களினூடாக வெளிப்படுத்தி உள்ளனர். ஒருவருடைய விளக்கமின்மை என்பது வேறு. ஆனால் அதனை மற்றவர்களைப் புண்படுத்தும்படி வெளிப்படுத்துவது என்பது வேறு. இந்த இரண்டாவதில் நிச்சயமாக உள்நோக்கம் ஏதாவது இருந்தாகவே வேண்டும் என்பதாலேயே இங்ஙனம் விளக்கம் எழுதும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளேன்.

‘நான் யாருடைய சார்பாகவும் பேசவில்லை, நான் அரசியல்வாதியுமில்லை, எனவே கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லத் தயங்க மாட்டேன்’ என்று கூறித்தான் எனது பேச்சினை நான் ஆரம்பித்தேன்.

பண்டா-செல்வா உடன்படிக்கை கைச்சாத்தானபோது அதைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியிலிருந்த சிலர் ஏற்கத் தயங்கினர். தனிச்சிங்களச் சட்டத்தைப் பலமாக எதிர்த்துவிட்டுப் பின்னர் வடக்கு-கிழக்குக்கு வெளியில் அதை ஏற்பதுபோல உடன்படிக்கை காணப்படுவதாக அவர்கள் முறைப்பட்டனர். மிகுந்த சிரமமெடுத்து உடன்படிக்கையின் சில ‘சூக்குமங்கள்’ கட்சியின் தலைமையினால் அவர்களுக்கு விளக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் சாந்தமடைந்தனர் என்ற வரலாற்றுப் பதிவை ஞாபகப்படுத்திவிட்டு எனது கருத்துக்களைக் கூறவிழைந்தேன். எந்தக் கருத்தும் ஒரு கட்டமைவுப் பின்னணியில் விளங்கிக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கை என்னிடம் அப்போதிருந்தது.

கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை அணுகுமுறையை ஆதரிக்கின்றேன் என்றும் சிவில் சமூகம் தனது கோரிக்கையில் அன்றி அதனை முன்வைத்த விதத்தில் எனக்கு உடன்பாடில்லை என்றும் குறிப்பிட்டதற்காக, நான் கூட்டமைப்பின் சார்பாகக் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். சிவில் சமூகத்தின் சார்பில் கலந்து கொண்டோர் யாவரும் கஜேந்திரகுமாரின் சார்பாகக் கலந்துகெண்டார்கள் என்று கூறுதல் எந்தளவுக்குத் தவறோ அந்தளவுக்கு இந்தப் புனைவும் தவறானதே என்பதை முதலில் தெளிவாக்க விரும்புகின்றேன்.

கூட்டமைப்பை ஆதரிப்போர் யாவருமே தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றைத் தூரவைத்து விட்டார்கள் என்ற அதீத கற்பனையின் விளைவாகவே சிலர் வரிந்து கட்டிக்கொண்டு வசனமெழுதுகின்றனர்.

இனிக் கருத்தியல்சார் விடயத்துக்கு வருவோம். ‘தேசியம், சுயநிர்ணயம் என்ற இரண்டுமே வெறுமனே வெற்றுக் கோஷங்கள், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இவை பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை’ என்று நான் அங்கு கருத்துத் தெரிவித்ததாக செய்திகள் மிக முக்கியத்தவம் கொடுக்கப்பட்டு இணையத் தளங்களில் பிரசுரமாகியுள்ளன.

இவையிரண்டும் பற்றி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் எழுதியும் (தமிழ்மொழி பேசாதவர்களுக்கும் சேர்த்து) கற்பித்தும் வருகின்றேன். மும்மொழியிலும் பிரசுரிக்கப்பட்ட இவ்விடயத்தில், பெரும்பான்மையினப் புத்திஜீவிகள் எனது சமரசமற்ற போக்கினை பல அரங்குகளில் தாராளமாக விமர்சித்துள்ளார்கள். அப்போதெல்லாம் எனது பேச்சையும் எழுத்தையும் முற்பக்கத்தில் பிரசுரித்து மகிழ்ந்தவர்கள், இவையிரண்டும் வெற்றுக் கோஷங்களே என்று தற்போது நான் பேசியதாகச் செய்தி வரும்போது அதனைப் பிரசுரிக்க முன்னர் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிக்காது விட்டமைக்கு என்ன காரணம்? நான் அக்கலந்துரையாடலில் கூட்டமைப்புக்கு ஆதரவான கருத்துக்களை கூறிவிட்டேன் என்பது மட்டுந்தானா?

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர் காலஞ்சென்ற மு. சிவசிதம்பரம் அவர்கள் ‘த ஐலண்ட’ பத்திரிகையில் பேராசிரியர் நளின் டி. சில்வாவுக்கு 1995 ஜூலை 15 இல் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தின் முடிவில் அவர், ‘பேராசிரியர் தமிழர்களின் உரிமைக் கோரிக்கைகள் பற்றி எழுத முன்னர் தமிழ்மாறன் போன்றோர் சுயநிர்ணய உரிமை பற்றி எழுதியுள்ள கட்டுரைகளை வாசித்துவிட்டு எழுதுதல் நன்று’ எனக் குறிப்பிட்டிருந்தார். சர்வதேசச் சட்டச் சஞ்சிகை ஒன்றில் நான் தேசியம், சுயநிர்ணயம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையை கலாநிதி நீலன் திருச்செல்வம் மூலம் பெற்று வாசித்ததன் பின்னரே திரு. சிவசிதம்பரம் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தேசியமும் சுயநிர்ணயமும் வெறுமனே வெற்றுக் கோஷங்கள் என்று கருதி நான் எழுதியிருந்தால் இன்றும் அக்கட்டுரை சர்வதேசச் சட்ட அறிஞர்களால் ஆதாரம் காட்டப்பட்டுக்கொண்டிருக்கும் தகுதியை நிச்சயமாகவே பெற்றிருக்க முடியாது.

பத்திரிகையாளர் நிமலராஜனின் முதலாவது நினைவஞ்சலிக் கூட்டம் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டபோது நண்பர் (தராகி) சிவராமின் அழைப்பின் பேரில், எல்லா அச்சுறுத்தல்களுக்கும் அப்பால் அங்கு சென்று நான் 20 ஒக்டோபர் 2001 இல் ஆற்றிய நினைவுப் பேருரை மேற்சொன்ன இரண்டு விடயங்களையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. இவையிரண்டும் வெற்றுக் கோஷங்களே என்று கருதுபவனின் உரையாக அது அமைந்திருந்தால் விடுதலைப் புலிகளின் விருப்பத்துக்குரிய வாசிப்பு விடயமாக அது பிரசித்தி பெற்றிருக்காது.

அமரர் குமார் பொன்னம்பலத்தின் மூன்றாவது நினைவுப் பேருரையை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்த (05-01-2003) தம்பி கஜேந்திரகுமார் அழைத்தபோது இடர்களைப் பொருட்படுத்தாது அங்கு சென்று நான் ஆற்றிய உரையில், சுயநிர்ணய உரிமையின் பல்வேறு பரிமாணங்களையும் அது பாவிக்கப்பட்டிருக்கும் விதங்களையும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன். இதில் கூட்டாட்சி முறைமையின் வகைளையும் சுட்டிக்காட்டியிருந்தேன். இதில் எவருமே வெற்றுக் கோஷங்களுக்கான அறிகுறிகளை அப்போது கண்டிருக்கவில்லை.

2004 நவம்பர் 26 ஆந் தேதிய ‘டெய்லி மிரர்’ இல் நண்பர் சிவராம் எழுதியிருந்த கட்டுரையில் எனது பெயரைக் குறிப்பிட்டு தமிழ்த் தேசியத்தின் போராட்டப் பாதையில் எனது பங்கு என்ன என்பதைக் கோடுகாட்டியிருந்தார். அது எத்தனையோ கதைகளைச் சொல்லப் போதுமானது.

இவை எல்லாவற்றையும்விட, கடந்த வருடம் ஏப்ரலில் தினக்குரலின் 15வது ஆண்டுமலரில் நான் எழுதிய கட்டுரையின் தலையங்கமே ‘தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம்: தெளிவும் தேவையும்’ என்று அமைந்திருந்தது. இக்கட்டுரையின் முதற் பந்தி வருமாறு தொடங்குகின்றது:

‘தமிழ்த் தேசியம் முள்ளிவாய்க்காலுடன் முடிந்து விட்டதாக நினைத்து வருந்துவோர் தமிழ் மக்களிடையே இருக்கின்றார்கள் என்பது எந்தளவுக்கு உண்மையோ அந்தளவுக்கு உண்மை அது அங்ஙனமே முடிந்துபோய்விட வேண்டும் என்று எண்ணுபவர்களும் உள்ளும் புறமும் உள்ளார்கள் என்பதே.’

தேசியத்துக்கான தொடர்ச்சியான அவசியத்தை அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்ட அக்கட்டுரையின் கடைசிப்பந்தி இவ்வாறு முடிகின்றது:

‘…. தேசியவாதத்தை வெறுமனே கருத்தளவில் கொண்டு நிறுவனத் தேவைகளின் அவசியம்பற்றி முரண்பாடான கருத்துக்களால் விலகிநிற்கும் தமிழ்த் தேசிய விசுவாசிகளுக்கும் யதார்த்தம் உணர்த்தப்பட்டு அவர்களும் உள்ளீர்க்கப்பட வேண்டும்.’

Concept is different from conception என்பது இலண்டனில் படித்த கஜேந்திரகுமாருக்கு விளங்கும் என்பதில் சந்தேகமில்லை என்பதால் தான் அக்கட்டுரையை அங்ஙனம் முடித்திருந்தேன். போருக்கு பிந்திய தமிழ்ச் சமூகத்தின் மிகப்பலவீனமான நிலைமையினைக் கருத்தில் கொண்டு நிறுவன ரீதியிலான தேவைபற்றியும் இதில் குறிப்பிட்டிருந்தேன்

மேற்படிக் கட்டுரையில் உள்ள ‘கருத்தளவிலான’ என்ற பொருளை விளக்கவே abstract concept என்ற சொற்றொடரை கடந்த வாரக் கலந்துரையாடலின்போது பாவித்திருந்தேன். தேசியம், சுயநிர்ணயம் பற்றிய ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்கான அழைப்பு அது.

அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அன்றும் இன்றும் ஒரேவித கருத்தையே சொல்லிக் கொண்டிருக்கின்றேன். இது சிலருக்குப் பிடித்திருக்கலாம். வேறு சிலருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். அதற்காக, வெற்றுக் கோஷங்கள் என்று குறிப்பிட்டதாக எழுதுவது அற்பத்தனமான செயற்பாடு மட்டுமன்றி சமூகத்தை முட்டாள்தனத்துக்கு உட்படுத்தும் முயற்சியுமாகும்.

அங்ஙனமே, கூட்டமைப்பை இது விடயத்தில் ஆதரிப்பதால் திரு. சம்பந்தனையோ அல்லது வேறு தனிப்பட்ட எவரையுமோ பாதுகாத்து வாதிடுவதாகவும் கருதக்கூடாது. தனிமனிதர்களைவிடக் கொள்கை முக்கியம் என்பது எனக்குத் தெரியாது இருந்திருந்தால் எத்தனையோ அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதற்கு முடிந்திருக்குமா என்பதை ‘முந்தாநாத்து புத்தகங்களைத் தூக்கியவர்களுக்கும் பிறர் முதுகில் சவாரி செய்ய முற்படுவோருக்கும்’ புரியவைக்க என்னால் முடியவில்லையே என்பது எனது கருத்தியல் சார்ந்த குறைபாடாகாது.

என்னுடைய இந்த நிலைப்பாடு காரணமாக எனக்கு ஏற்பட்ட ‘தொல்லைகளோ’ ஏராளம். இவைபற்றி எனக்கு நெருக்கமான ஒரு சிலரே அறிந்துள்ளனர். இவை எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்தி அனுதாபம் பெறவோ அன்றி புலம்பெயரவோ நான் ஒருபோதுமே விரும்பியதில்லை. விரும்பப் போவதுமில்லை.

இன்றுங்கூட, கூட்டமைப்பை நான் விமர்சிக்க வேண்டும் என்ற உள்நோக்கில் சில ஊடகங்கள் என்னைத் தொடர்புகொண்டபடிதான் உள்ளன. எனது ‘வாசிப்பு’ அனுபவத்தினால் அவர்களது வேண்டுதல்களைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருவது மட்டுமன்றி, கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு மேலும் உறுதி பெற்றிருக்கின்றது. உண்மையில் இன்று அரசாங்கத்துக்குத் தேவைப்படுவது எல்லாம் கூட்டமைப்பின் தரப்பிலிருந்து ஒரு தீவிரவாதக் குரல் கேட்க வேண்டும் என்பதுதான். இதை நிறைவேற்ற முற்படுவதுக்கு யார் எந்த வடிவில் துணைபோனாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே.

இத்தகைய ஒரு காலகட்டத்தில் கூட்டமைப்பை ஆதரிக்கும் தார்மீகப் பொறுப்பை நான் தட்டிக்கழிக்க விரும்பவில்லை. அதனைச் சிலர் தவறாக விளங்கிக் கொள்வதையிட்டு நான் கவலைப்படுகின்றேன் என்பது உண்மை தான் என்றாலும் அதற்காக, எனது நிலைப்பாட்டுக்கான எல்லாக் காரணங்களையும் ‘புட்டுவைக்க’ முடியாமைக்கு வருந்துகின்றேன்.

கடந்த வாரக் கலந்துரையாடலின் போது நான் விளக்க முற்பட்டவை இவைதான்:

தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை முதலில் உச்சரித்தது என்னவோ திரு.ஜி.ஜி. பொன்னம்பலமே என்றாலும் அதனை ஓர் அரசியல் இயக்கத்தின் தாரக மந்திரமாக்கியது 1949 இல் தமிழரசுக் கட்சியேதான். 1951 இல் திருகோணமலையில் கட்சி நிறைவேற்றிய மாநாட்டுத் தீர்மானங்களிலிருந்து இக்கோரிக்கை முழு வீச்சுடன் செயற்படத் தொடங்கியது. தமிழரசுக் கட்சி ஒரு போதுமே தமிழ் இனத்தின் உரிமை என்று அல்லாமல் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமையாகவே கூட்டாட்சியை வலியுறுத்தி வந்தது. ஆயுதப் போராட்டத்துக்கு அடிகோலிய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்தான் முதன் முதலில் தமிழ் இனத்தின் கோரிக்கை என்ற விடயம் முன்னெடுக்கப்பட்டது.

குடியரசுப் பிரகடனத்தின் பின்னர் நிலைமை இறுக்கமாகியதால் பின்புலப் பலமின்றி கோரிக்கைகளை வலியுறுத்துவதில் பிரயோசனமில்லை எனக் கண்டறிந்த கூட்டணித் தலைவர்கள் அன்று முதலில் அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு ஆதரவு திரட்டியதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அவ்வேளையில் ஆயுதப் போராட்டத்தில் பல இளைஞர்கள் இணைந்து கொண்டிருந்தனர்.

1987 இல் இந்திய -இலங்கை உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டபோது அதில் கூறப்பட்ட விடயங்களைச் செயற்படுத்தவென இந்திய அமைதிப்படை இங்கு வந்திருந்தது. சுதுமலைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் செய்த பிரகடனத்தில் ஓர் ஒப்படைப்பை இந்தியாவிடம் செய்வதாக அறிவித்திருந்தார்.

ஆக, ஒரு பின்புலத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியற் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது நிறைவேறாத நிலையில், விடுதலைப் புலிகள் தமது ஆயுத பலத்தின் மூலம் அதை நிறைவேற்ற முற்பட்டனர். சுயநிர்ணயக் கோரிக்கையின் பின்புலமாக ஆயுத பலமும் ஆள்புலக் கட்டுப்பாடும் இருந்தது. இவையிரண்டும் அற்றுப்போன நிலையில், மிகப் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இனமொன்றின் அதே கோரிக்கைக்கு இன்றிருக்கும் பின்புலமென்ன?

ஒன்று தமிழ் மக்கள் கொடுத்திருக்கும் வாக்குகள் மூலமான அதிகார ஆணை. மற்றையது அரசியல் தீர்வு தொடர்பான சர்வதேசத்தின் அனுதாபப் பார்வை. இவற்றைவிட எந்தப் பின்புலமும் இன்றைய நிலையில் தமிழ்மக்கள் தங்கள் அரசியல் அபிலாஷகளைப் பூர்த்திசெய்வதற்கான பலத்தைத் தரப்போவதில்லை. புலம்பெயர் தமிழர்களது பலமும் செயற்பாட்டு வேகமும் புறக்கணிக்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது என்னவோ உண்மை தான். ஆனால், அத்தகைய பின்புலம் மட்டுமே போதுமாக இருந்திருப்பின் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்க முடியாது. அதுபோலவே, களத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் பலத்துக்குச் சமமாக புலம்பெயர் தமிழர்களின் சக்தியினைச் சர்வதேச சமூகம் எடைபோடப் போவதுமில்லை.

சர்வதேசத்தின் ஆதரவுப் பார்வை அனுதாபப் பார்வையாகவே உள்ளதை நாம் மறக்கக் கூடாது. விடுதலைப் புலிகள் இருந்தபோது அத்தகைய பார்வை இருந்திருக்கவில்லை. அவர்கள் அத்துணை பலத்தோடு இருந்த வேளையில்கூட சர்வதேச சமூகம் உள்ளகச் சுயநிர்ணய உரிமை என்பதற்கு அப்பால் போவதுபற்றி நினைத்துப் பார்ப்பதற்குக் கூடத் தயாராக இருந்திருக்கவில்லை.

எனவே தற்போது இந்த அனுதாபப் பார்வையைத் தக்கவைப்பதற்கான முயற்சியே இன்று அவசியம் தேவைப்படுவதாகும். அது ஜனநாயக வழியினூடாகவும் ஜனநாயக நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதன் மூலமாகவும் உலகுக்கு தெளிவாக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் நாம் மிகப் பலவீனமான நிலையில் இருந்துள்ளோம் என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்கக் கூடாது. அங்ஙனம் செய்வதன் மூலம் ஒரே கல்லில் இரு மாங்காய்களை இலக்கு வைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

எனவே இந்த நம்பிக்கையை வெளிக்காட்டுவதற்குப் பதிலாக, தேசியம், சுயநிர்ணயம் என்ற எண்ணக்கருக்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்போமானால் சர்வதேசத்தின் அனுதாபப் பார்வை படிப்படியாக எம்மைவிட்டு விலகிப் போய்விடலாம். அல்லது நாளடைவில் ஒரு சந்தேகப் பார்வையாகவும் மாறிவிடலாம். சர்வதேசத்தின் ஆதரவு என்பது என்றைக்குமே நிலையானதுமல்ல என்பதுடன் கட்டாயமாக அது நியாயத்தின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டுமென்பதுமல்ல. எனவே எப்போது மாற்றமேற்படலாம் என்பதை அவதானித்து அதற்கேற்ப நம்மை நாமே தயார்ப்படுத்தும் பக்குவத்தைப் பெற்றக்கொள்ள வேண்டும்.

வேறு விதத்தில் சொல்வதானால், கவனம் பலகாரத்தில் இருக்க வேண்டுமே தவிர சிலுசிலுப்பு ஓசையினை இரசிப்பதில் இருக்கக் கூடாது. இதைக் கூறும்போதுதான் நாம் சமரசத்துக்குத் தூண்டுகின்றோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

வெளியுலக ஆதரவென்பது வெறுமனே வெற்றிடத்தில் (vacuum) கால் பதிப்பதில்லை. காலூன்றுவதற்கான ஓர் ஆதரவுத்தளத்தை அது மறைமுகமாகவோ அன்றி நேரிடையாகவோ வேண்டிநிற்கும். ஆயுதப் போராட்டம் தொடர்ந்தால் தனக்கு ஆதரவான ஆயுதக்குழுவை வெளியுலகு தோற்றுவிக்கும் அல்லது ஊக்குவிக்கும். ஆயுதபலம் இல்லாதபோது அதே விதத்தில் அரசியற் குழுவொன்றை சர்வதேச சக்தி முன்னிலைப்படுத்தும். அதனூடாகவே அது தனது செல்வாக்கை இறைமை கொண்ட நாடொன்றின் மீது செலுத்த முற்படும். இல்லையேல் இறைமை மீறல் என்ற கூச்சலுக்கு அது உலக அரங்கில் முகங்கொடுக்க வேண்டிவரும். எவ்வளவு பலம்வாய்ந்த நாடாயினும் இந்த வாய்பாட்டினின்றும் விலகிச் செயற்பட அது முனைய மாட்டாது. இதுவே கூட்டான அக்கறையாக வெளிப்படுத்தப்படும்போது நெறிமுறையான அரசியற் சக்தி ஒன்றின் மீது பந்தயம் கட்டவே சர்வதேச சமூகம் முற்படும் (இது பற்றி சிவராம் பல தடவைகளில் விளக்கியிருந்தார்).

இது பொதுவாகவே மோசமாகப் பிளவுபட்ட எந்தச் சமூகத்துக்கும் பொருந்தக்கூடிய வாய்ப்பாடாகும் என்றாலும் ‘பயங்கரவாதத்தைத் தோற்கடித்த’ அரசின் விடயத்தில் தலையீடு செய்யும்போது ஜனநாயக அமைப்பு ரீதியலான நம்பிக்கையை வெளிப்படுத்தும் எமது கடப்பாடு இரட்டிப்பு நிலையில் வெளியாரால் எதிர்பார்க்கப்படும்.

அரசின் செயற்பாடு எப்படி இருக்கின்றது என்ற கேள்வி இரண்டாம் பட்சமாகவே இருக்கும் இத்தகைய சந்தர்ப்பத்தில் எமது நடவடிக்கைகள் என்ன சமிக்ஞைகளைக் காட்டி நிற்கின்றன?

இங்கேதான் பேச்சுவார்த்தைகள், தேர்தல் (எந்த மட்டத்திலாயினும் சரி), அழைப்புக்கள் போன்ற (ஜனநாயகப்) பொறிகளைத் தெரிந்து கொண்டும் எழுந்தமானமாக அவற்றை நிராகரிக்காமை இப்போது எமக்கு மட்டுமே அவசியமாகின்றன. இவையெல்லாம் எதற்காக என்றால் – ஒன்று எமது பலவீனம் காரணம், மற்றையது வெளியுலக ஆதரவுக்காகப் பின்புலத்தை உருவாக்கும் அவசியத்தை உணர்ந்திருத்தல் என்பதனாலாகும். அரசுக்கு இருக்கும் சில அனுகூலங்கள் அரசல்லாத அமைப்புக்களுக்கு இது விடயத்தில் இருக்கமாட்டா. அதுவும் போர்புரிந்து தோற்றுப்போயுள்ள சமூகத்தில் பிரதிகூலங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.

இதையெல்லாம் சமரசம் என்று வாதிட முற்படின், நிலமில்லாமல் வீட்டைக் கட்டியெழுப்ப வேண்டியதுதான். இதைத்தான் அந்தரத்தில் தொங்கவிடும் செயற்பாட்டில் இறங்க முற்பட வேண்டாம் என்று குறிப்பிட்டேன். பண்டா-செல்வா உடன்படிக்கை விடயத்தை மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

இரண்டு கால்களையும் இழந்த ஒருவர்கூட சொந்தக்காலில் நிற்கும் திடசங்கற்பத்தோடு இருக்கலாம். ஆனால் நான் சொல்வதெல்லாம் அந்தத் திடசங்கற்பத்தைச் செயற்படுத்துவதற்கு முதலில் கைப்பிடி ஒன்றைத் தேடிக்கொள்ளுங்கள் என்பதுதான். கைப்பிடிதான் கால் என்று நான் சொல்வதாகப் பொருள்கொண்டால் கடவுள் நம்மீது இரக்கம் காட்டட்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply