மன்னாரில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமைக்கு வைக்கப்பட்ட தீ
மன்னார் மாவட்டத்தில் தமிழ் முஸ்ஸிம் மக்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமையினை உடைத்து இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சித்துள்ளன.
இத்தீவைப்பைச் செய்தவர்கள் உடன் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் தமிழ்-முஸ்ஸிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். 1990 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீண்டும் மன்னாரில் வந்து தமது குடியேற்றத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் எந்தவொரு வேலைத்திட்டமாக இருந்தாலும் இம்மக்கள் இன மத வேற்றுமையின்றி சேவையாற்றி வருகின்றனர். கடந்த வருடம் இடம் பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது மன்னார் நகர சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியது. இந்த நிலையில் குறித்த சபை மன்னார் மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த காலங்களில் வாராந்த சந்தையாக குறித்த சந்தை காணப்பட்டது. நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலையின் காரணமாக தினச்சந்தையாக காணப்பட்டது. இதன் போது தமிழ், முஸ்ஸிம் வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
அதிகளவான வர்த்தகர்கள் தென் பகுதியைச் சேர்ந்தவர்களாக காணப்பட்டனர். இந்த நிலையில் குறித்த சந்தையை மீண்டும் வராந்த சந்தையாக மாற்ற மன்னார் நகர சபை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறித்த வியாபாரிகளை சந்தையினை விட்டு எழும்ப நகர சபை கால அவகாசத்தினை வழங்கி வந்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் நகர சபைக்கும் குறித்த வர்த்தகர்களுக்கும் இடையில் வன்முறையினை தூண்டி மன்னார் மாவட்டத்தில் தமிழ் முஸ்ஸிம் மக்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமையினை உடைத்து இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சித்துள்ளன. மன்னார் நகர சபையின் வேலைத்திட்டத்தினை முடக்கவும் சில தீய சக்திகள் முயற்சிக்கின்றது.
எனவே குறித்த சதியை நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply