53 இஸ்லாமிய நாடுகள் பேரவை இலங்கையை ஆதரிக்க தீர்மானம்
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நேற்றுத் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு 53 இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய மாநாட்டுப் பேரவை (ஓ.ஐ.சி) முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கென விசேட தீர்மானமொன்றை நிறைவேற்றி அத்தீர்மானத்தை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போதே இஸ்லாமிய மாநாட்டு பேரவை அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவை மாநாட்டின் நிமித்தம் ஜெனீவா சென்று திரும்பியுள்ள இலங்கை அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு திரட்டிக் கொள்ளுவதற்காக உலகின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும், முக்கியஸ்தர்களையும் நாம் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். இப்பேச்சுவார்த்தைகளின் ஊடாக நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவ்விவகாரம் தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை நடத்திய எல்லா நாடுகளும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆறிக்கையை பெரிதும் வரவேற்றன.
மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு நல்க வேண்டுமென 53 இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய மாநாட்டு பேரவை செயலாளர் நாயகம் எக்மலடின் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம்.
இச்சந்திப்புக்கு முன்னர் மாநாட்டு பேரவையின் செயலாளர் நாயகத்தை தாம் பிரத்தியேகமாக நேரில் சந்தித்து இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினேன்.
எமது வேண்டுகோளை ஏற்று இஸ்லாமிய மாநாட்டு பேரவை விசேடமாகக் கூடியது. இக்கூட்டத்தின் போது இப்பேரவையில் அங்கம் வகிக்கும் சவூதி அரேபியா, பங்களாதேசம், பாகிஸ்தான், மாலைதீவு போன்ற நாடுகள் மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனப் பலமாக வலியுறுத்தின.
இப்பேரவையின் கூட்டத்தின் போது பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டு இப்போது தான் இருவருடங்களாகின்றன. அங்கு அபிவிருத்தி ஏற்படுகின்றது. அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் சிறப்பாகவும் முன்னேற்றகரமாகவும் உள்ளன. அதனால் இவ்விவகாரத்தில் இலங்கைக்கு சந்தர்ப்பமும், நேர காலமும் வழங்கப்பட வேண்டும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பெரிதும் வரக்கூடியதாகவுள்ளது.
இலங்கை ஒரு சிறிய நாடு. இந்நாட்டுக்கு சந்தர்ப்பமும், நேர காலமும் வழங்காமல் அவசர அவசரமாக நடவடிக்கை எடுப்பதல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு, தீர்மானம் எடுக்கப்பட்டன. இத்தீர்மானத்தை இஸ்லாமிய மாநாட்டுப் பேரவை, மனித உரிமை பேரவை மாநாட்டின் போதும் அறிவித்தது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply