ஜெனீவா உறுதி மொழிக்கு எதிராக ஹெல உறுமய கடுமையாக சாடியுள்ளதோடு தமது எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோமென ஜெனீவா மனித உரிமை பேரவையின் விடயத்தோடு அரசு தரப்பு அமைச்சர் வழங்கிய உறுதிமொழிக்கு எதிராக போர்க் கொடி தூக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இதனைக் கடுமையாக சாடியுள்ளதோடு எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாடு படுபயங்கரமான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஹெல உறுமய சுட்டிக் காட்டியுள்ளது.
இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு முக்கியஸ்தரும் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க மேலும் தெரிவிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதி சார்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா முன் வைத்தார்.
கிட்டத்தட்ட இவ்வறிக்கை 700, 800 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. எனவே இதனை வாசிப்பதற்கு நீண்ட கால அவகாசம் தேவை.
அத்தோடு பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள இவ் அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டு இணக்கப்பாடு காணப்படவில்லை. நல்லாட்சி சுயாதீன துணைக்குழு இனப்பிரச்சினை அதிகாரப் பரவலாக்கல் என இவ்வாணைக்குழு தனது வரையறையை மீறி செயற்பட்டு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
எனவே இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு மக்கள் மத்தியில் இதனைக் கொண்டு சென்று பரந்தளவில் பேசப்பட்டு தேவையானவை எவை? குப்பையில் போடப்பட வேண்டியவை எவை? என்பதை தீர்மானித்த பின்னரே இதனை பகிரங்கமாக நிறைவேற்றுவது தொடர்பில் அறிவிக்க வேண்டும்.
ஆனால் இவ்வாறான எதுவிதமான நிகழ்ச்சித் திட்டத்தையும் முன்னெடுக்காது அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் சர்வதேச நாடுகள் மத்தியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுமென உறுதி மொழி வழங்கியுள்ளார்.
இதனால் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறும் தன்மையை உள்வாங்கிக் கொண்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் இப் பொறுப்புக் கூறும் தன்மையில் இருந்து அரசாங்கத்திற்கு விடுபட முடியாது. இதனால் சர்வதேச நாடுகள் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காக கால அவகாசத்தை வழங்கும். அது மட்டுமல்லாது பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதை ஆராய சர்வதேச நாடுகளின் பிரதி நிதிகளையும் நியமிக்கும். பொறுப்புக் கூறும் தன்மையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதால் நிச்சயம் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் சர்வதேச தலையீடுகள் அதிகரிக்கும்.
எனவே நாடும் மக்களும் படுபயங்கரமான எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம் என்ற உறுதிமொழி சர்வதேச பொறிக்குள் நாட்டை சிக்க வைத்துள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply