மீனவர் கொலை – இத்தாலிய அழுத்தம் அதிகரிக்கிறது

இந்திய மீனவர்கள் இருவரை கொன்றதான சந்தேகத்தின் பேரில் இத்தாலிய கடற்படையினர் இருவரை இந்தியா தடுத்து வைத்துள்ளது மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தவல்லது என்று இத்தாலியப் பிரதமர் மாரியோ மோன்டி எச்சரித்துள்ளார்.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுடன் தொலைபேசியில் பேசிய இத்தாலியப் பிரதமர் மரியோ மாண்டி, மீனவர் கொலை விவகாரம் தொடர்பான இத்தாலியின் நிலையை நேரடியாக எடுத்துரைத்தார். சர்வதேசக் கடல்பரப்பில் கடல்கொள்ளையர்களுக்கு எதிராக கடமையாற்றிக் கொண்டிருந்த இத்தாலிய அதிகாரிகளை தடுத்து வைக்க இந்தியாவுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என்று இத்தாலி கூறுகிறது.

இத்தாலிய எண்ணெய் கப்பலில் சென்ற கடற்படையினர், மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என்று சந்தேகித்து சுட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சம்மந்தப்பட்ட இரண்டு இத்தாலியக் கடற்படை அதிகாரிகள் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது கொலை வழக்குத் தொடரப்படலாம் என்ற செய்தி இத்தாலியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த சர்வதேச சட்டங்கள் முறையாக அனுசரிக்கப்படாவிட்டால், ஒரு தவறான முன் உதாரணம் ஏற்படும் என்று இத்தாலியப் பிரதமர் இந்தியப் பிரதமரிடம் கூறியதாக அவரது அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. இதன் காரணமாக கடல்கொள்ளயர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என்ற கருத்தும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து தான் முழு கவனம் செலுத்துவேன் என்றும், இத்தாலியக் கடற்படையினர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு பதிலாக வேறு வசதியான இடத்தில் வைப்பது தொடர்பாக பரிசீலிக்கவும் இந்தியப் பிரதமர் உறுதி வழங்கியதாக இத்தாலியப் பிரதமர் அலுவலகம் கூறுகிறது.

ஆனால் இது தொடர்பான இந்தியத் தரப்புத் தகவல்கள் வெளியாகவில்லை. இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட மீன் பிடிப் படகில் இருந்த மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரிக்கும் சட்டரீதியான அதிகாரம் தனக்கு இருப்பதாக இந்திய அரச கூறுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் இத்தாலியின் அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

மீனவர் கொலை கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் அது அங்கே அரசியல்ரீதியான பிரச்சனையாகவும் உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply