தமிழர்களின் நலன் சார்ந்து இந்தியா முடிவெடுக்கும் : அமைச்சர் வி.நாராயணசாமி
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தின் மீது இந்தியா தமிழர்களின் நலனை மனதில் கொண்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என்று இந்தியப் பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
இத்தீர்மானம் குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் ஒருமித்த கருத்தையே வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்த நாராயணசாமி, தானும், அமைச்சர் ஜி.கே.வாசனும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்து இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும்போது, தமிழ் நாட்டின் உணர்வுகளை மனதில் கொண்டு , இந்தியா இலங்கைக்கு எதிராகவே வாக்களிக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
மன்மோகன் சிங்
அதே போல இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தான் நேரில் சந்தித்து இதே நிலைப்பாட்டை வலியுறுத்தியதாகவும், பிரதமரும் அதைப் பரிவுடன் கவனிப்பதாகக் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தில் இந்திய அரசு திறந்தமனதுடன் இருப்பதாகவும், தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இலங்கை மீது பெரும் செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படும் இந்திய அரசு, போருக்கு பின்னர்,இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் விஷயத்திலோ அல்லது, போரினால் ஏற்பட்ட மனித நேயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விஷயத்திலோ, இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவில்லை என்ற விமர்சனங்களை அமைச்சர் நாராயணசாமி மறுத்தார்.
இலங்கை அரசு ஒரு சுதந்திரமான நாடு, அதன் உள்விவகாரங்களில் ஒரு வரம்புக்குள்ளேயே இந்தியா தலையிட முடியும். தீர்வு காணுங்கள் என்று வலியுறுத்தலாமே தவிர வற்புறுத்தமுடியாது என்றார். ஆனால் மனித நேயப் பிரச்சினைகளில் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply