40 ஆண்டு போரை 4 நாட்களில் நிறுத்த முடியாது தமிழக முதலமைச்சர் கருணாநிதி
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாகச் செயற்படமாட்டோம் என்று தெரிவித்திருக்கும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி 40 ஆண்டுகாலமாக இடம்பெற்றுவரும் போரை 4 நாட்களில் நிறுத்திவட முடியாது என்றும் கூறியுள்ளார். இலங்கை விவகாரம் குறித்து ஞாயிறன்று புதுடில்லியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து விளக்கிய பின்னர் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை விவகாரம் குறித்து இந்திய மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தமக்கு பூரண திருப்தி அளிப்பதாகவும், இந்தியா தமக்கு உறுதியளித்திருக்கும் விடயங்கள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும், அப்படி இல்லாவிடில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்றும் கூறியது என்னாயிற்று என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு;ப பதிலளித்த கருணாநிதி, “40 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போரை 4 நாட்களில் நிறுத்திவிட முடியாது. பொதுமக்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றவேண்டும் என்பதற்காகவே போரை நிறுத்துமாறு கோரினோம். இப்போது பொதுமக்கள் கொல்லப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா விவகாரம் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பதால், அதுகுறித்து மீண்டும் கட்சிகள் கூடியே தீர்மானிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கவேண்டும் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விடுத்திருக்கும் கோரிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் கருணாநிதி, இதுகுறித்து மத்திய அரசே தீர்மானம் எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply