இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐ.நா. பேரவையில் வெற்றி : ஆதரவாக 24 நாடுகள்; எதிராக 15 நாடுகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை வெற்றியளித்துள்ளது. இந்த வாக்களிப்பின் போது அமெரிக்காவுக்கு ஆதரவாக 24 நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்திருந்தன. இலங்கை தொடர்பில் அமெரிக்கா மிதமான சமச்சீரான பிரேரணை ஒன்றையே ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைத்ததெனவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே பிரேரணையின் நோக்கம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த 3 வருட கால அவகாசம் இருந்ததாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

பிரேரணை நிறைவேறுவதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கம், அமைதி, சமாதானம் என்பவற்றை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரேரணை குறித்த விவாதத்தின்போது சபையில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க, மொகான் பீரிஸ் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கை தரப்பு வாதங்களை முன் வைத்து விசேட தூதுவர் மகிந்த சமரசிங்க உரையாற்றியிருந்தார்.

அமெரிக்காவின் பிரேரணை 9 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேறியது.

இப்பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா உட்பட 24 நாடுகளும் எதிராக சீனா மற்றும் ரஷ்யா உட்பட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இலங்கையில் தமிழருக்கு அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் குறிப்பிட்டு அமெரிக்கத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த சீனப் பிரதிநிதி, “இலங்கையின் இறைமைக்கு ஊறு விளைவிக்கும் இத் தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாகவும் இத்தீர்மானம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் ஒரு செயல்” எனவும் குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததுடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளது. அதே நேரம் மெக்சிகோ தீர்மானத்துக்கு ஆதரவாகவும் மாலைதீவு, தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன.

ரஷ்யா இத் தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்தது. உருகுவே, பெல்ஜியம் போன்ற பெரும்பாலான நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்தை உறுதியாக ஆதரித்தன.

இதேவேளை கியூபா இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பதாகத் தெரிவித்தது. இலங்கையில் விசாரணை நடத்த வேண்டுமென எதிர்பார்க்கும் அமெரிக்கா, ஏன் லிபியாவில் நேட்டோ படைகள் மேற்கொண்ட பொதுமக்கள் மீதான தாக்குதல்களை விசாரணை செய்ய முன்வரவில்லை என கேள்வி எழுப்பியது.

இவ் வாக்கெடுப்பின் போது உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதி இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஒருதலைப் பட்சமானது என்றும் இத் தீர்மானமானது இலங்கையில் விடுதலைப் புலிகளை மீண்டும் தமது நடவடிக்கையைத் தொடர வழி செய்வதாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply